வெள்ள நிவாரண உதவி கோரி ஜொகூர் எம்.பி.க்கள் கோரிக்கை

இன்று வரவுசெலவுத் திட்டத்தை விவாதிக்கும் பல ஜொகூர் எம்.பி.க்கள் மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 40,000 க்கும் மேற்பட்டவர்களுக்குப் போதுமான உதவி வழங்கப்படவில்லை என்ற பிரச்சினையை எழுப்பியுள்ளனர்

அமினோல்ஹுடா ஹசன்(Aminolhuda Hassan) (Pakatan Harapan-Sri Gading) அவசர நிவாரணப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட ரிம50 மில்லியன் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.

“இந்தத் தொகையை ரிம50 மில்லியனிலிருந்து ரிம150 மில்லியனாக உயர்த்துமாறு நாங்கள் கோருகிறோம்,” என்று கூறிய அமினோல்ஹுடா, தனது தொகுதியின் கீழ் 25 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

அமினோல்ஹுதா ஹாசன்

காப்பகங்களில் அடிப்படை வசதிகள், குறிப்பாகப் போர்வைகள் மற்றும் உணவு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த புகார்களையும் அவர் எடுத்துரைத்தார்.

“விநியோகம் மிகவும்  தாமதமாக இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். மூன்று நாட்களுக்குப் பிறகு, இன்னும் போர்வைகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். அது பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

விநியோகத்தில் ஏற்படும் தாமதங்களைத் தடுக்க உள்ளூர் கேட்டரிங் நிறுவனங்களால் தயாரிக்கப்படும் உணவு விநியோகத்தை சிறப்பாக நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“நிறுவனங்கள் அதிக ஆர்டர்களை ஏற்கக் கூடாது… உணவு வழங்குவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம், “என்று அவர் கூறினார்.

வீ கா சியோங் (BN-Ayer Hitam) தனது தொகுதியில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரமற்ற உணவு வழங்கப்படுவது குறித்தும் இதே போன்ற பிரச்சினையை எழுப்பினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தற்போது எங்களுக்குத் தெரியாது என்றார்.

நேற்று, பல நிவாரண மையங்களைப் பார்வையிட்டபின்னர், வீ, வழங்கப்பட்ட உணவின் அளவு போதுமானதாக இல்லை என்றும், உணவு விநியோகமும் மிகவும் தாமதமாக இருப்பதாகவும், காலை உணவுக் காலை 11 மணிக்குப் பிறகு மட்டுமே வழங்கப்பட்டதாகவும், சிலருக்கு மதியம் 2 மணிக்குப் பிறகு மதிய உணவு வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

இந்த விவகாரத்தை அரசு உடனடியாகக் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

முன்னதாக, முகிடின் யாசின் (Perikatan Nasional-Pagoh) வெள்ள நிவாரண உதவிகளை வழங்குவதில் அரசியல் உணர்வுகளை ஒதுக்கி வைக்குமாறு அரசாங்கத்திற்கு நினைவூட்டினார்.

வீ கா சியோங்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 300,000 ரிங்கிட் ஒதுக்கீட்டை அரசாங்கம் அங்கீகரிப்பதும் இதில் அடங்கும் என்று அவர் கூறினார்.

ஜொகூருக்கான ரிம50 மில்லியன் ஒதுக்கீட்டை வரவேற்பதில், அந்தத் தொகையை ரிம100 மில்லியனாக அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் முகிடின் கூறினார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம், நேற்று ஜொகூருக்கு வருகை தந்தபின்னர், நிலைமை மேம்பட்டுள்ளதால் அவசரநிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும், மாநிலத்தில் வெள்ளத் தணிப்பு திட்டங்களைச் செயல்படுத்துவது விரைவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சரான அன்வார் கூறினார்.