வெள்ளம் பாதித்த மாநிலங்களில் மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்ட 2023/2024 கல்வியாண்டு ஒத்திவைக்கப்படாது என்று கல்வி அமைச்சர் ஃபாத்லினா சிடெக்(Fadhlina Sidek) தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளைச் சரிசெய்யும் பணிகளை அந்தத் தேதிகளுக்கு முன்னர் மேற்கொள்ள முடியாவிட்டால், மாணவர்கள் வீட்டு அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றல் (PdPR) மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
“ஜொகூரில் கடுமையான வெள்ள நிலைமையால் 17 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன, செகாமட் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, 14 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளன, மற்ற மாவட்டங்களில் மூன்று பாதிக்கப்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்த இரண்டு வாரங்களுக்குள் சேதத்தை உடனடியாகச் சரிசெய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று நான் நினைக்கிறேன்”.
“நாங்கள் பள்ளி அமர்வை ஒத்திவைக்கமாட்டோம், ஆனால் கற்றல் செயல்முறை தொடரும் வகையில் PdPR வழியாகச் செல்வதற்கான விருப்பத்தை நாங்கள் வழங்குவோம்,” என்று அவர் இன்று செகாமாட்டின் சாவில் உள்ள இடைநிலைப்பள்ளியில்(Chaah, Segamat) தற்காலிக நிவாரண மையத்தைப் பார்வையிட்டபின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கல்வி அமைச்சர் பத்லினா சிடெக்
தொழில்நுட்பத் தரப்பிலிருந்தும், பொறியியலாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பள்ளிகள் சேதமடைந்தது மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் மேசைகள் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டதாக ஃபத்லினா கூறினார்.
2023/2024 கல்வி நாட்காட்டிக்கான பள்ளி அமர்வு Group A மாநிலங்களுக்கு (கிளந்தான், திரங்கானு, கெடா மற்றும் ஜொகூர்) மார்ச் 19 அன்று தொடங்கும், மார்ச் 20 Group B மாநிலங்களுக்கு (மலாக்கா, நெகிரி செம்பிலான், பஹாங், பேராக், பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவாக், சிலாங்கூர், கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா).
இன்று காலை நிலவரப்படி, மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 53,040 ஆகவும், ஜொகூரில் மொத்தம் 49,410 நபர்களும் பதிவாகியுள்ளனர்.
இதற்கிடையில், சீருடைகள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்கள் இழந்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த சிரமங்களை அறிந்த ஃபத்லினா, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சாதாரண ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வரக் கல்வி அமைச்சு நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என்று கூறினார்.
“எங்களிடம் மனிதாபிமான சிந்தனைகள் உள்ளன, எனவே அவர்கள் (மாணவர்கள்) பள்ளிக்குச் சாதாரண உடையில் வரலாம் மற்றும் வழக்கம்போல் பள்ளி அமர்வைத் தொடங்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, அவர் செகாமாட்டின் சாவில் உள்ள இடைநிலைப்பள்ளியின் நிவாரண மையத்தையும் பார்வையிட்டார்.