ஹம்சா: பெர்சத்து இரட்டையர் பதவி நீக்கம் அதிகார துஷ்பிரயோகம்

சட்டமன்ற உறுப்பினர்களான காலிட் மஹ்தாப் இஷாக்(Khalid Mahtab Ishaq) மற்றும் ஜோல்கிஃப்லி லாசிம்(Zolkifly Lazim) ஆகியோரை பினாங்கு மாநில சட்டமன்றத்திலிருந்து நீக்கியது அதிகார துஷ்பிரயோகம் என்று பெர்சத்து பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுடின்(Hamzah Zainudin) கூறினார்.

ஒரு அறிக்கையில், ஹம்சா (மேலே) இருவரும் பெர்சத்துவிலிருந்து ஒருபோதும் ராஜினாமா செய்யவில்லை அல்லது வேறு அரசியல் கட்சியில் சேரவில்லை, எனவே, பினாங்கு மாநில அரசியலமைப்பின் பிரிவு 14A ஐப் பயன்படுத்த முடியாது என்று கூறினார்.

“பினாங்கு சட்டமன்றம் தங்கள் இடங்களைக் காலி செய்ய முடிவு செய்திருப்பது தெளிவான அதிகார துஷ்பிரயோகமாகும். மேலும், இது ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலாகவும், சட்ட மீறலாகவும் உள்ளது”.

“வாக்காளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பினாங்கு மாநில சட்டமன்றம் வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கிறது,” என்று ஹம்சா கூறினார்.

முன்னதாக, பினாங்கு சட்டமன்றத்தில் அஃபிஃப் பஹார்டின் (Seberang Jaya), சுல்கிஃப்லி இப்ராஹிம் (Sungai Aceh), காலிக் (Bertam) மற்றும் சோல்கிப்ளி (Teluk Bahang) ஆகியோர் வசம் இருந்த நான்கு இடங்களைக் காலி செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நான்கு பேரும் 2018 இல் PKR இன் இருக்கையின் கீழ் தங்கள் இடங்களை வென்றனர். அந்த நேரத்தில், அஃபிஃப்(Afif) மற்றும் சுல்கிஃப்லி(Zulkifli) ஆகியோர் பி.கே.ஆர் உறுப்பினர்களாகவும், காலிக்(Khaliq) மற்றும் ஜோல்கிஃப்லி(Zolkifly) பெர்சத்து உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

2020 ஆம் ஆண்டில், அஃபிஃப் மற்றும் சுல்கிஃப்லி பெர்சத்துவில் இணைந்தனர், அதே நேரத்தில் காலிக் மற்றும் சோல்கிப்ளி ஆகியோர் பக்காத்தான் ஹராப்பானின் சோ கோன் இயோ தலைவராக இருப்பதற்கான ஆதரவை விலக்கிக் கொண்டனர்.

காலிக் இறுதியில் பினாங்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், 14A பிரிவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற நால்வரின் விண்ணப்பத்திற்கு எதிராகப் பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கிடையில், நான்கு முன்னாள் பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களின் வழக்கைத் தள்ளுபடி செய்த பினாங்கு உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்துப் பெர்சத்து மேல்முறையீடு செய்யும் என்று ஹம்சா கூறினார்.

“பிரிவு 14Aஐ விளக்குவதில் நீதிமன்றம் தவறு செய்துவிட்டதாக நாங்கள் நம்பினோம், எனவே, பெர்சத்து மேல்முறையீடு செய்யும்,” என்று அவர் கூறினார்.

2020 அக்டோபரில் தங்கள் இடங்களைக் காலி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தீர்மானம் தொடர்பாகப் பினாங்கு சட்டமன்றம் மற்றும் சபாநாயகர் சூக்கியாங் ஆகியோருக்கு எதிராக நான்கு பேரும் தாக்கல் செய்த வழக்கைப் பினாங்கு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அவர்களுக்கு எதிரான தீர்மானத்தின் மீது முடிவெடுக்க முடியாது, ஏனெனில் மாநில சட்டமன்றத்தின் மீது அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.