கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் (High-Speed Rail) திட்டத்திற்கு அரசாங்கம் நிதியளிக்காத வரை புதுப்பிக்கும் திட்டங்களுக்கு மலேசியா தயாராக உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோகே(Anthony Loke) கூறினார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்பே குறிப்பிட்டுள்ளபடி, மெகா திட்டத்தைத் தொடர தனியார் துறையின் எந்தவொரு முன்மொழிவையும் அரசாங்கம் வரவேற்கிறது என்று அவர் கூறினார்.
“நாங்கள் அதைத் தடுக்கவில்லை. அதுபற்றிப் பேசலாம் என்று பிரதமர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார். அரசாங்கத்தால் நிதியளிக்கப்படாத வரை தனியார் துறையின் எந்தவொரு திட்டங்களுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் இன்று கோலாலம்பூரில் உள்ள இன்வெஸ்ட் மலேசியாவில் பேசியபின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
எவ்வாறாயினும், இப்போதைக்கு, அரசாங்கம் இன்னும் தனியார் துறையிலிருந்து எந்தவொரு குறிப்பிட்ட அல்லது முழுமையான முன்மொழிவுகளையும் பெறவில்லை என்றும், முகிடின்யாசின் தலைமையிலான முந்தைய நிர்வாகத்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திட்டத்தை முடிக்கக் காலக்கெடு எதுவும் இல்லை என்றும் லோகே கூறினார்.
“எந்தவொரு மைல்கல்லையும் அடைவதில் எந்த அவசரமும் இல்லை, எனவே இப்போது மலேசியா ஒரு முழுமையான புதிய நிதி பொறிமுறை மற்றும் செயல்படுத்தலுக்குத் திறந்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
டிசம்பர் 31, 2020 அன்று திட்ட ஒப்பந்தம் காலாவதியாவதற்கு முன்பு மலேசியாவால் முன்மொழியப்பட்ட மாற்றங்கள்குறித்து இரு நாடுகளும் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதால், ஜனவரி 1, 2021 அன்று, மலேசியாவும் சிங்கப்பூரும் கூட்டாக HSR திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தன.
கேரி தீவு(Carey Island) துறைமுக முன்மொழிவு குறித்து கேட்டபோது, துறைமுக கிள்ளான் ஆணையம் அதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் அமைச்சரவை அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் லோக் கூறினார்.
துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் தனியார் துறைகள் ஆர்வம் காட்டுகின்றன, ஆனால் இப்போது அது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்று அவர் கூறினார்.