“PNஐ அழிக்க ஹராப்பான், BN நடத்தும் அரசியல் தந்திரம்” – முகிடின்

முன்னாள் பிரதமர் முகிடின்யாசின் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் BN, பெரிக்காத்தான் நேசனலை (PN) “அழிக்க” மேற்கொண்ட அரசியல் தந்திரம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“நாளை என்னை நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்வதன் மூலம், இது என்னைச் சங்கடப்படுத்தும் நோக்கம் கொண்டது”.

“எனது கருத்துப்படி, இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்ட ஒரு அரசியல் தந்திரமாகும், இது பெர்சத்து மற்றும் PN ஐ அடக்குவதற்கும் அழிப்பதற்கும் மட்டுமே ஹராப்பானும் BN னும் மேற்கொண்டது,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக, ஜனா விபாவா திட்டம்(Jana Wibawa) மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள்குறித்து தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகப் பெர்சத்து தலைவர் ஊழல் தடுப்பு அமைப்பின் தலைமையகத்தில் ஆஜரானார் என்று தெரிவிக்கப்பட்டது.

முதலில் காலை 11.10 மணிக்கு உள்ளே சென்ற அவர், மதியம் 1 மணிக்குக் கைது செய்யப்பட்டு, இன்று இரவு 8.20 மணிக்கு மட்டுமே விடுவிக்கப்பட்டார்.

முகிடினின் கூற்றுப்படி, விசாரணையின்போது MACC இரண்டு பிரச்சினைகளை எழுப்பியது; ஜனா விபாவா திட்டம் மற்றும் அல்புகாரி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீடு – இது தொழிலதிபர் சையத் மொக்தார் அல்-புகாரி(Syed Mokhtar Al-Bukhary) தலைமையில் இருந்தது.

“ஜனா விபாவாவைப் பொறுத்தவரை, நான் சட்டத்தின் கீழ் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நான் உறுதியாகக் கூறியுள்ளேன். அரசின் எந்தத் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை”.

நிதியமைச்சகம் எடுக்கும் முடிவுகளில் நான் ஒருபோதும் அறிவுறுத்தல்களை வழங்கவில்லை அல்லது செல்வாக்கு செலுத்தவில்லை. திட்டங்கள் வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்களையும் நான் ஒருபோதும் சந்தித்ததில்லை, அவர்களிடமிருந்து ஒருபோதும் பணம் பெறவில்லை.

“நான் பணம் பெற்றதற்கான எந்த ஆதாரத்தையும் MACC கண்டுபிடிக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

அல்புகாரி அறக்கட்டளையைப் பொறுத்தவரை, முன்னாள் BN அரசாங்கத்தால் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கை மீண்டும் வழங்கியதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்படும் என்று முகிடின் விளக்கினார்.

2018 ஆம் ஆண்டில் ஹராப்பான் வெற்றி பெற்ற பின்னர் அப்போதைய நிதியமைச்சர் லிம்குவான்எங் வரிவிலக்கை ரத்து செய்தார் என்று அவர் கூறினார்.

ஹரப்பான் அரசாங்கம் வீழ்ந்தபின்னர் தான் பிரதமரானபோது, ரத்து செய்யப்பட்டதை நீக்குமாறு சையத் மொக்தார் வேண்டுகோள் விடுத்ததாக முகிடின் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அவர் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரி சபைக்கு (LHDN) கடிதம் எழுதினார், “அது ஒழுங்காக இருந்தால், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,” என்று கூறி, மேன்முறையீடு பின்னர் அங்கீகரிக்கப்பட்டது.

சையத் மொக்தார் அல்-புகாரி

“சையத் மொக்தாரின் பங்களிப்புகள் இருந்தால், அவை நேரடியாகப் பெர்சத்துவின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட அரசியல் பங்களிப்புகள், எனது தனிப்பட்ட கணக்கு அல்ல. அந்தப் பங்களிப்புகளில் ஒரு சென் கூட எனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எனக்கு வழங்கப்படவில்லை”.

“அவர் பல தசாப்தங்களாக அரசாங்கத்தில் உள்ளவர்கள் உட்பட அரசியல் கட்சிகளுக்கு நிதி பங்களிப்புகளை வழங்கி வருகிறார் என்பதை நான் அறிவேன்”.

“மலாய்க்காரர்களுக்கும் நாட்டிற்கும் நல்ல கொள்கைகளை ஆதரிக்கும் கட்சியான பெர்சத்துவுக்கு அவர் பங்களிக்க விரும்பினால், அதில் என்ன தவறு?” என்று முகிடின் கேட்டார்.

அப்போது பாகோ எம்.பி., தன் மீது எந்தச் சட்டத்தின் கீழும் குற்றம் சாட்டுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று கூறினார். இருப்பினும், அவர்மீது குற்றம் சாட்ட “நிர்வாகத்தில் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனத்திடமிருந்து,” உத்தரவு வந்ததாக அவர் கூறினார்.

எனவே, நான் என்ன விளக்கம் அளித்தாலும் என்மீது குற்றம் சாட்டப்படும் என்றார்.

‘நாங்கள் அமைதியான கட்சி’

முன்னதாக ஒரு சுருக்கமான அறிக்கையில், எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 23 மற்றும் பணமோசடி எதிர்ப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் 2001 இன் பிரிவு 4 (1) ஆகியவற்றின் கீழ் முகிடின் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என்று எம்ஏசிசி கூறியது.

அவர் நாளைக் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

தனது கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் குழப்பத்தை உருவாக்குவார்கள் என்று அஞ்சுகிறீர்களா என்று கேட்டபோது, பெர்சத்து ஒரு “அமைதியான கட்சி” என்று முகிடின் அதை முற்றிலுமாக நிராகரித்தார்.

“நாங்கள் இந்த நாட்டை நேசிக்கிறோம், அந்தச் சீர்திருத்த நாட்களில் அன்வார் இப்ராஹிமின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற நாங்கள் விரும்பவில்லை. மக்கள் பல சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்கின்றனர், இது சரியான விஷயம் அல்ல”.

“அவர்கள் (Bersatu) நன்றாக நடந்து கொண்டனர். தற்போது, அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்,  நாளை அவர்கள் ஆதரவைக் காட்ட நீதிமன்றத்தில் வருவார்கள் என்று நான் நினைக்கிறேன்”.

“அவர்களைப் பொறுத்தவரை, இது முகீடினைப் பற்றியது அல்ல, அது பெர்சத்து மற்றும் PN பற்றியது,” என்று அவர் கூறி முடித்தார்.