EPF கடன் பிணையமாக முன்மொழிவது பொருத்தமற்றது – சங்கம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) சேமிப்பை அவசரகால கடன்களுக்குப் பிணையமாகப் பயன்படுத்த அனுமதிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை “மோசமான யோசனை” என்று சரவாக் வங்கி ஊழியர் சங்கம் வர்ணித்துள்ளது.

“EPF சட்டத்தின் கீழ், பங்களிப்பாளர்களின் சேமிப்புகள் திவால் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன, எனவே கடன் வாங்கியவர்கள் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறினால் என்ன நடக்கும்? இது போன்ற அடமானத்தில் வங்கிகள் எங்களுக்குக் கடன் வழங்க விரும்புமா?”

இதுகுறித்து சங்கத்தின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ லோ(Andrew Lo) கூறுகையில், “இந்தத் திட்டம் கடன்களுக்காக ஏங்கித் தவிப்பவர்களுக்கானது என்பதால், அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாததற்கான அதிக ஆபத்து உள்ளது,” என்று கூறினார்.

ஈபிஎஃப் கணக்குகளில் போதுமான சேமிப்புகளைக் கொண்ட பங்களிப்பாளர்களுக்கு இந்த வசதி பொருந்தும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்த கருத்துக்கு அவர் பதிலளித்தார்.

“EPF இல் உள்ள பணம் ஓய்வூதிய சேமிப்பிற்கானது என்பது எனது கொள்கை. கோவிட் -19 இன் போது, நாங்கள் நெகிழ்வுத்தன்மையை அளித்தோம் (மக்கள் திரும்பப் பெறுவதற்கு). ஆனால் இப்போது, அதே நெகிழ்வுத்தன்மையை வழங்கிய பிற நாடுகளும் இதை நிறுத்தியுள்ளன”.

“அதற்குப் பதிலாக, பணம் தேவைப்படுபவர்களுக்கு உதவ மற்றொரு முறையை நான் முன்மொழிகிறேன்”.

“கடுமையான நெருக்கடியில் உள்ள போதுமான சேமிப்பைக் கொண்ட பங்களிப்பாளர்களை, தங்கள் சேமிப்பை பிணையமாகப் பயன்படுத்தி, வங்கியிலிருந்து கடன் பெற ஈபிஎஃப் இடமளிக்கும் என்பதை நான் உறுதி செய்வேன். இது சிறந்தது,” என்று நிதியமைச்சரான அன்வார் நேற்று நாடாளுமன்றத்தில் 2023 வழங்கல் மசோதா மீதான தனது நிறைவு உரையின்போது கூறினார்.

EPF டிவிடெண்டுகளை விட வங்கிகள் அதிக வட்டி விகிதத்தை வசூலிக்கும் என்றும், இது பங்களிப்பாளர்களை இன்னும் மோசமான நிதி நிலைமைக்கு வழிவகுக்கும் என்றும் லோக கூறினார்.

“இது அபாயகரமான அளவை எட்டியுள்ள கடன் அளவையும் அதிகரிக்கும்”.

“ஏற்கனவே தொழிலாளர்களின் வருமானத்தின் கணிசமான பகுதி வீட்டுவசதி, வாகனம் மற்றும் நுகர்வோர் கடன்களைச் செலுத்துவதற்காக உள்ளது,” என்று லோ கூறினார்.