முகிடினுக்கு எதிராகப் பிரதமரின் உதவியாளர் புகார்

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் உதவியாளர் ஒருவர், பெர்சத்து தலைவர் முகிடின்யாசினுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அரசியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ள அமலாக்க அமைப்புகளை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவாகத் தனது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று முகிடின் கூறியதைப் பற்றியது இது.

நிதி அமைச்சில் அன்வாரின் அரசியல் செயலாளரான முகமட் கமில் அப்துல் முனிம்(Muhammad Kamil Abdul Munim), வெள்ளிக்கிழமை பெர்சத்து தலைவர்மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர் கூறப்பட்ட கருத்துக்கள் அவதூறானவை மற்றும் அவமதிக்கக்கூடியவை என்று கூறினார்.

“அவரது அறிக்கை ஒரு தீங்கிழைக்கும் குற்றச்சாட்டு, அவமதிப்பு மற்றும் அவதூறானது என்பது தெளிவாகிறது, அமலாக்க அமைப்புகள் மற்றும் வழக்குரைஞர்களின் நேர்மை குறித்து தவறான கருத்துக்களை உருவாக்கும் நோக்கத்துடன், அன்வாரின் மதிப்பைச் சேதப்படுத்தும்,” என்று அவர் தனது போலீஸ் அறிக்கையில் கூறினார்.

புத்ராஜெயாவில் போலீஸ் புகார் செய்யப்பட்டது.

பிரதமர் அன்வார் இப்ராகிம்

வெள்ளியன்று, முகிடின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் 232.5 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார் – அவர் பிரதமராக இருந்த காலத்தில் மூன்று நிறுவனங்கள் மற்றும் ஒரு தனிநபரிடமிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெர்சத்து தலைவரும் அவரது ஆதரவாளர்களும் இவை அரசியல் நன்கொடைகள் என்று மறைமுகமாகக் கூறியுள்ளனர்.

ஜனா விபாவா திட்டம் தொடர்பாக முகிடின் மீது இன்று மேலும் 5 மில்லியன் ரிங்கிட் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

தலையீட்டை மறுக்கும் எம்ஏசிசி, ஏஜிசி

எம்.ஏ.சி.சி மற்றும் அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் இரண்டும் தங்கள் பணிகளில் அரசியல் தலையீட்டை மறுத்துள்ளன என்று கமில் தனது போலீஸ் அறிக்கையில் குறிப்பிட்டார்.

எனவே, முகிடினின் அவதூறான கருத்துகளுக்காக அவரை விசாரிக்குமாறு அவர் காவல்துறையை வலியுறுத்தினார்.

கடந்த டிசம்பரில், அன்வார் தனது போட்டியாளர்களை விசாரிக்கக் காவல்துறைக்கு உத்தரவிடுவதை மறுத்தார்.

“நான் ஒருபோதும் விமர்சகர்களை விசாரிக்கக் காவல்துறைக்கு உத்தரவிடவில்லை. உண்மையில், பிரதமரையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பது ஜனநாயக அமைப்பில் அனுமதிக்கப்படுகிறது என்று நான் காவல்துறைத் தலைவரிடம் கூறினேன்”.

மறுபுறம், அன்வார் எதிர்கட்சியில் தன்னை விமர்சித்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்.