கோலாலம்பூர் நகர மன்றம் (DBKL) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் சுகாதார அமைச்சுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகள்மூலம் பொது இடங்களில் புகைபிடித்தல் தொடர்பான குற்றங்களுக்காக 1,500 க்கும் மேற்பட்ட நோட்டீஸ்களை வழங்கியது.
பொதுப் பூங்காக்கள், உணவகங்கள், அரசுக் கட்டிடங்கள் மற்றும் மூடப்பட்ட நடைபாதைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பகுதிகள் என்று டிபிகேஎல் நிர்வாக இயக்குநர் கைருல் அனுவார் முகமட் ஜூரி(Khairul Anuar Md Juri) கூறினார்.
“தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகை பிடிப்பவர்களுக்கு 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும், இது சம்பவ இடத்திலேயே செலுத்தப்பட வேண்டும்”.
“அவர்கள் அபராதத்தை செலுத்தத் தவறினால், அவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவது உள்ளிட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்,” என்று அவர் இன்று Kuala Lumpur Bebas Asap Rokok (KLBAR) X MySchoolBus @Wilayah பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துக் கூறினார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதற்கும் புற்றுநோய் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (Sustainable Development Goals) இணங்க இந்தப் பிரச்சாரம் இருப்பதாகக் கைருல் கூறினார்.