மக்கள் முற்போக்கு கட்சியின் முடிவில்லா தலைமைத்துவ போராட்டம்

இராகவன் கருப்பையா – மலேசிய அரசியல் வானில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பி.பி.பி. எனும் மக்கள் முற்போக்கு கட்சி பல தடவை தலைமைத்துவ போராட்டத்திற்கு இலக்காகி இப்போது உடைந்து போய் வலுவிழந்துக் கிடக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு அக்கட்சியை இட்டுச் சென்றவர்கள் அதைப் பற்றி கொஞ்சமும் வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை.

ஈப்போ, பேராக்கைச் சேர்ந்த சீனிவாசகம் சகோதரர்களான தர்ம ராஜா சீனிவாசகமும் ஸ்ரீ பத்மராஜா சீனிவாசகமும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் இந்த பி.பி.பி. கட்சியை தோற்றுவித்தது இன்றைய இளைய தலைமுறையினரில் நிறைய பேருக்குத் இவர்களைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்களாவும் அரசியல்வாதிகளாகவும் வலம் வந்த அவ்விருவரும் ‘பேராக் முற்போக்கு கட்சி’  எனும் பெயரில் தொடக்கிய அக்கட்சி பிறகு 1959ஆம் ஆண்டில் ‘மக்கள் முற்போக்கு கட்சி’ என்று பெயர் மாற்றம் கண்டது.

ஈப்போவை தளமாகக் கொண்ட அக்கட்சி கடந்த 1950களிலும் 60களிலும் மக்களிடையே, குறிப்பாக பேராகில் மிகுந்த செல்வாக்கைக் கொண்டு பல நாடாளுமன்றத் தொகுதிகளை தன் வசம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘சீனிவாசகம் சகோதரர்கள்’ என்றால் நாடாளுமன்றமே அதிரும் அளவுக்கு புகழ் பெற்றிருந்த அவ்விருவரும் மக்கள் நலனைத் தவிர வேறு எதனை பற்றியும் கடுகளவும் சிந்தித்ததில்லை என்று வரலாறு காட்டுகிறது.

ஆனால் அவர்களுடைய மறைவுக்குப் பிறகு தலைமைத்துவ பொறுப்புகளை ஏற்ற எண்ணற்ற அரசியல்வாதிகள் அக்கட்சிக்கு இருந்த நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் இன்று வரையிலும் உள்கட்சி பூசல்களுக்கு காரணமாக இருக்கின்றனர்.

நாட்டின் அரசியல் வரலாற்றில் அநேகமாக வேறு எந்த கட்சியும் தலைமைத்துவ போராட்டத்தில் இத்தனை தடவை நிதிமன்றம் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு இப்போது சந்தி சிரிக்கிறது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று நிலைமையை சீர்படுத்திய கேவியஸ் எனும் கே.வி.சுப்ரமணியம் கடந்த 2015ஆம் ஆண்டில் அதன் பெயரை ‘மை பி.பி.பி.’ என்று மாற்றினார்.

அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் தலைமைத்தவ போராட்டம் வெடித்தது. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் மலையில் போட்டியிடுவதற்கு ஏறத்தாழ 2 ஆண்டுகளுக்கு முன்பே அங்கு முகாமிட்டு தயார் நடவடிக்கைகளை மேற்கொண்ட கேவியஸுக்கு கடைசி நேரத்தில் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் அப்போதைய பிரதமர் நஜிப் கேவியஸுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி அத்தொகுதியை ம.இ.கா.வின் சிவராஜிக்கு வழங்கினார்.

இதனால் கோபமடைந்த கேவியஸ், தேர்தல் முடிந்த மறுகணமே தனது கட்சி பாரிசானை விட்டு விலகுவதாக அறிவித்தார். ஆனால் கட்சியில் இருந்து கேவியஸை விலக்கிவிட்டதாகக் கூறிக் கொண்ட மெக்லின் டிக்ருஸ், மை பி.பி.பி. இன்னமும் பாரிசானில் அங்கம் வகிப்பதாக அறிவித்தார். இச்சூழலில் அக்கட்சி பாரிசானில் இருக்கிறதா இல்லையா என அநேகமாக பாரிசான் தலைமைத்துவத்திற்கே குழப்பமாகத்தான் இருந்திருக்கும்.

கோறனி நச்சிலின் தாக்கத்தினாலும் இரு தடவை அரசாங்கம் மாறியதாலும் உறங்கிக் கிடந்த அக்கட்சி தற்போது மீண்டும் தலைமைத்துவ போராட்டத்திற்கு தயாராகிவிட்டது.

ஆண்டுக் கூட்டத்தையும் தேர்தலையும் நடத்துமாறு சங்கங்களின் பதிவு இலாகா கடந்த அக்டோபர் மாதத்தில் வழங்கிய கடிதத்திற்கு ஏற்ப தேர்தலை நடத்தி கட்சிக்கு தாம் தலைவராகியுள்ளதாக கடந்த சனிக்கிழமையன்று கேவியஸ் அறிவித்தார்.

அதே வேளையில் பிரிதொரு ஆண்டுக் கூட்டத்தையும் தேர்தலையும் கடந்த ஞாயிரன்று (19.3.2023) சுமார் 1,200 பேராளர்கள் முன்னிலையில் நடத்திய டென்னிஸ் டிக்ருஸ், தானே கட்சியின் தலைவர் என பிரகடனப்படுத்திக் கொண்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையில் அதிகாரத்தில் இருந்த தரப்பினர்தான் ஆண்டுக் கூட்டத்தையும் தேர்தலையும் நடத்த வேண்டும் என சங்கங்களின் பதிவு இலாகா உத்தரவிட்டதாவும் அதன்படிதான் தலைவராக தாம் தேர்வு பெற்றதாவும் மெக்லின் கூறினார்.

இப்படிப்பட்ட சூழலில் இவர்களுடைய பதவிப் போராட்டம் இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில் இவ்விரு தரப்பினரும் மீண்டும் நீதிமன்ற வாசலை மிதிக்க வாய்ப்புள்ளது.

ஏறகெனவே பலவீனமாக இருக்கும் பாரிசான் கூட்டணி தனது இழந்த பலத்தை மீட்க இவர்களை அரவனைப்பார்கள் என்றே தோன்றுகிறது.