இராகவன் கருப்பையா – நம் நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு அரசியலில் தொடர்ந்து தீவிர ஈடுபாடு கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருபவர் யார் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
மலேசியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் 13 ஆண்டுகளுக்கு நாட்டின் முதல் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரஹ்மான் கடந்த 1970ஆம் ஆண்டில் பதவி துறந்ததிலிருந்து அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
அதன் பின் பிரதமர் பொறுப்பேற்ற துன் ரசாக் 1976ஆம் ஆண்டில் மரணமடைந்ததைத் தொடர்ந்து 3ஆவது பிரதமராக அரியணை அமர்ந்த துன் உசேன் ஓனும் அப்படிதான். கடந்த 1981ஆம் ஆண்டில் தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அரசியல் பக்கமே அவர் தலைக் காட்டவில்லை.
ஆனால் நாட்டின் 4-வது பிரதமராகப் பொறுப்பேற்ற மகாதீர் 22 ஆண்டுகள் கழித்துச் சுயமாகவே பதவி விலகிய போதிலும் திரை மறைவில் இருந்து கொண்டு அடுத்தடுத்து வந்த பிரதமர்களை நிம்மதியாக வேலை செய்ய விடவில்லை.
அவருக்கு அடுத்துக் கடந்த 2003ஆம் ஆண்டில் பிரதமரான படாவியை தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்க எண்ணிய அவர் பலவாறான தொல்லைகளைக் கொடுக்கத் தொடங்கினார்.
குறிப்பாகச் சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையில் வளைந்த பாலம் ஒன்றை நிர்மாணிக்கத் தனது பதவி காலத்தின் போது மகாதீர் திட்டமிட்டிருந்தார். அத்திட்டத்தைப் படாவி தொடராதலால் அவர் மீது மிகுந்த சினம் கொண்டார் மகாதீர்.
பிறகு 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற ஹிண்ட்ராஃப் பேரணி மகாதீருக்கு வாயில் சர்க்கரை போட்ட மாதிரியாகிவிட்டது. அந்நிகழ்வைத் தொடர்ந்து நடைபெற்ற நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலில் ஒட்டு மொத்த இந்தியர்களும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளித்ததால் ஆளும் பாரிசான் கூட்டணி முதல் முறையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது.
இதனை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, படாவி ஒரு கையாலாகாத பிரதமர் எனப் பட்டயம் பூசி அவர் மீது பல்வேறு அவதூறுகளைச் சுமத்தி அவர் பதவி விலக வேண்டும் என மகாதீர் நெருக்குதல் கொடுக்கத் தொடங்கி அதில் வெற்றியும் கண்டார்.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டின் 6ஆவது பிரதமராகப் பொறுப்பேற்ற நஜிபையும் பிறகு அவர் நிம்மதியாக விட்டபாடில்லை. தனது புதல்வர் முக்ரிஸுக்கு சாதகமான அரசியல் சூழல் அமையாததால் மேகா திட்டம் ஒன்றை அவர் வரைய ஆரம்பித்தார்.
அதற்கு ஏற்றவாறு 1MDB ஊழலில் நஜிப் மாட்டிக் கொண்டதால் அவரை வீழ்த்துவதற்கு இந்த விவகாரத்தைக் கையிலெடுத்தார் மகாதீர். அதற்குச் சாதகமாக ‘சரவாக் ரிப்போட்’ இணைய ஊடகத்தின் ஆசிரியர் ரூகாசல் ப்ரௌன் 1MDB ஊழல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் அம்பலப்படுத்தியிருந்தது வரலாறு.
தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பக்காத்தான் ஹராப்பானிடம் ஒரு பொய் வாக்குறுதியைக் கட்டவிழ்த்து அக்கூட்டணியை நம்ப வைத்ததோடு 2 ஆண்டுகள் கழித்து அந்த அரசாங்கமும் கவிழ வித்திட்டது எல்லாருக்கும் தெரியும்.
அதாவது 2 ஆண்டுகள் பிரதமராக இருந்துவிட்டுப் பிறகு அன்வாரிடம் அப்பதவியை ஒப்படைத்துவிடுவேன் என்று கூறி நாட்டு மக்கள் அனைவரையுமே மகாதீர் ஏமாற்றியதை உலகறியும்.
இருந்த போதிலும் யாரைப் பற்றியும் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் தேள் தனது குணத்தைக் காட்டிவிடும் அல்லவா? ஆக இப்போது அன்வாரைக் கவிழ்க்க அவர் திட்டம் தீட்டி வருவதைப் போல் உள்ளது.
அன்வார் மலாய்க்காரர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை எனவும் அவர்களைப் பேசவிடாமல் தடுக்கிறார் என்றும் பொய் பிரச்சாரம் செய்து நாட்டில் குழப்பத்தைத் தூண்ட முனைந்துள்ளார். அது மட்டுமின்றி ‘மலாய்க்காரர்களை நான் காப்பாற்றப் போகிறேன்’ என்றும் கிளம்பிவிட்டார். இனத்துவேசக் கருத்துகளை உமிழ்ந்து மக்களைக் குழப்பி எப்படியாவது அன்வாரை கவிழ்த்துவிட வேண்டும் எனும் தீய நோக்கத்தில்தான் இவ்வாறெல்லாம் அவர் செய்கிறார் என்று எல்லாருக்குமே தெரியும். இப்படிப்பட்ட சூழ்ச்சிதாரரை யார்தான் நம்புவார்?
ஏனெனில் கடந்த சுமார் 25 ஆண்டுகளாகப் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு அன்வாரை பிரதமராகவிடாமல் அவர் தடுத்து வந்ததும் வெள்ளிடை மலை. அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து அன்வார் பிரதமரானது மகாதீருக்குப் பெருத்த ஏமாற்றம்தான் என்பதில் ஐயமில்லை.
எது எப்படி இருந்தாலும் இம்முறை மகாதீரின் ஜம்பம் பலிக்காது என்று உறுதியாகக் கூறலாம். ஏனெனில் அவருடைய சூழ்ச்சியை நன்றாக உணர்ந்துள்ள அன்வார் வலுவான ஒரு அரசாங்கத்தை நம்பிக்கையோடு தற்போது வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.