குட்டையைக் குழப்பாதிருக்க மெளனம் காக்கிறார் அருள்திரு இயு

கிறிஸ்துவ சமயத் தலைவரான அருள்திரு இயு ஹொங் செங், கிறிஸ்மஸ் நிகழ்வு ஒன்றில் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சால் எழுந்துள்ள களேபரம் தொடர்பில் கருத்துரைக்க மறுக்கிறார்.

இன்று காலை மலேசியாகினியுடன் பேசிய நேசனல் இவேன்செலிகல் கிறிஸ்டியன் ஃபெல்லாசிப் (என்இசிஎப்)பின் தலைவர், அது பற்றிய சர்ச்சையில் குதித்து “குட்டையை மேலும் குழப்ப” விரும்பவில்லை என்றார்.

முன்னதாக, இன்றைய மலேசியாகினிக்கு அவ்விவகாரம் தொடர்பில் வழங்கிய விளக்கத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்ட இயு, தாம் சொல்வதைத் திசைதிருப்ப முனைவோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை என்றார்.

“நான் ஒன்று சொல்ல, அவர்கள் ஒன்று சொல்ல இதற்கு ஒரு முடிவே இருக்காது.

“என் உரையே தெளிவாக உள்ளது. அதை மேலும் விளக்க வேண்டிய அவசியமில்லை”, என்று டிசம்பர் 24இல் ஆற்றிய உரை சரியே என்பதை அவர் வலியுறுத்தினார்.

சனிக்கிழமை கிறிஸ்மஸ் ஹை-டி ஒன்றில் உரையாற்றிய இயு, கூட்டரசு அரசமைப்பின் 153ஆம் பகுதியின்கீழ் பெரும்பான்மை மக்களுக்குள்ள உரிமைகள் பற்றி அடிக்கடி பேசுவது சிறுபான்மை இனங்களை அச்சுறுத்துவதற்கு ஒப்பாகும் என்றார்.

அரசமைப்பில் பூமிபுத்ராக்களுக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் உள்ள சிறப்பு உரிமைகள் ஒரு பிரச்னையே அல்ல.

ஆனால், பெரும்பான்மை இனத்தின் “மாறும் உரிமைகள்”தான் குழப்பத்தை உண்டுபண்ணி அந்த உரிமைகளின் எல்லை குறித்து கேள்வி எழுப்புகிறது என்றவர் குறிப்பிட்டார்.

இயுமீது தேசநிந்தனை குற்றம் சாட்டப்பட வேண்டும்: பெர்காசா

அவரின் உரையை அடுத்து துணைப் பிரதமர் முகைதின் யாசின் அரசமைப்பு 153ஆம் பகுதி பற்றிப்  பேசுவதை அனைவரும் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மலாய் உரிமைக்காக போராடும் என்ஜிஓ-வான பெர்காசா, இயுமீது தேசநிந்தனை குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று நேற்று கோரிக்கை விடுத்தது.

அருள்திரு இயு, கடுமையான கருத்துக்களைச் சொல்லத் தயங்காதவர். 2008-இல் ஒரு கிறிஸ்மஸ் நிகழ்வில் பேசியபோது கிறிஸ்துவர்கள் ஏன் கடைவீடுகளிலும் தொழிற்பேட்டை பகுதிகளிலும் வழிபாடு செய்ய  வேண்டும் என்றவர் கேள்வி எழுப்பினார்.

அந்நிகழ்வில், அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹமட் படாவியும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.