நீச்சல் வகுப்பு பயிற்றுவிப்பாளர் ஒருவர், தனது வளர்ப்பு மகளை 12 வயதிலிருந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 32 குற்றச்சாட்டுகளின் பேரில் இன்று மலகாவில் உள்ள இரண்டு அமர்வு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டார்
நீதிபதி முகமட் சப்ரி இஸ்மாயில்(Mohd Sabri Ismail) மற்றும் நீதிபதி தர்மஃபிக்ரி அபு ஆதாம்(Darmafikri Abu Adam) ஆகியோர் முன்பு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர் 37 வயதான நபர் “நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்,” என்று கூறினார்.
வழக்கின் உண்மைகள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்தைப் படிக்கத் துணை அரசு வழக்கறிஞர்கள் முகமது நஸ்ரின் அலி ரஹீம் மற்றும் என்.சிவசங்கரி ஆகியோர் அந்தத் தேதியில் விண்ணப்பித்ததைத் தொடர்ந்து இரு நீதிமன்றங்களும் மே 15 ஆம் தேதி தண்டனையை ஒத்திவைத்துள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதி செய்வதற்காக அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அரசுத் தரப்பு கோரியது.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, மேலும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (2) இன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன, இது அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சாட்டையடி ஆகியவற்றை உள்ளடக்கியது மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 376 (1) இன் கீழ் 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் சாட்டையடி ஆகியவற்றை உள்ளடக்கியது.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 CA இன் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவரது ஒப்புதல் இல்லாமல் உடலுறவு கொண்டதாக எட்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார், இது அதிகபட்சம் 30 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சாட்டையடி விதிக்கப்படலாம்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் அந்த நபர்மீது 12 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, இது 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் சாட்டையடி ஆகியவற்றை உள்ளடக்கியது.
அனைத்து குற்றங்களும் ஜனவரி 2020 முதல் மார்ச் 14, 2023 வரை ஜாசினின் தாமன் மஜுவில் நடந்துள்ளன.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அந்த இளம்பெண் அவரது வளர்ப்பு தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகப் போலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவங்கள் அவர்களது குடும்ப வீட்டில் இடம்பெற்றிருக்கலாமென நம்பப்படுவதாகவும் நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.