தீர்ப்புக்கு முன்னதாக அன்வார் புயல்வேகச் சுற்றுலா

பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்,  ஜனவரி 9-இல், குதப்புணர்ச்சி வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்குமுன் நாட்டுக்குள் புயல்வேகச் சுற்றுலா ஒன்றை மேள்கொள்வார்.

ஜனவரி 3-இலிருந்து 8வரை ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பாகாங், திரெங்கானு, கிளந்தான், பினாங்கு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் 18 இடங்களில் அவர் பேசுவார். 

தீர்ப்பில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அந்த முன்னாள் துணைப் பிரதமர், இன்னும் சில மாதங்களில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சிறைக்கு அனுப்பப்படும் சாத்தியம் இருக்கிறது. 

எனவேதான், தமக்கும் நாட்டுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளையும் பக்காத்தான் ரக்யாட்டால் ஏற்பட்டுள்ள சீரமைப்புகளை எடுத்துரைக்க அன்வார் சுற்றுப்பயணம் மேற்கொள்வது அவசியம் ஆகிறது என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார்.

“அவர் சிறையிடப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அதனால் நீதிமன்றம் அவரை விடுவிக்கும் என்றே எதிர்பார்க்கிறோம்.

“அவப்பேறாக, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டால் மக்களுக்கு நிலவரத்தை விளக்கவும் பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவு திரட்டவும் இது நல்ல வாய்ப்பாக அமையும்” , என்றாரவர்.