போதைப்பொருள் கடத்திய குற்றவாளி ஒருவரை சிங்கப்பூர் அரசு இன்று தூக்கிலிட்டது. அவரது உறவினர்கள் மற்றும் ஆர்வலர்கள் கருணைக்காக வேண்டுகோள் விடுத்தது பயன் அற்றதாகிவிட்டது என்று அவரது குடும்பத்தின் பிரதிநிதி கூறினார்.
46 வயதான தங்கராஜூ சுப்பையா (மேலே), 2013 ஆம் ஆண்டில் 1 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காக தண்டிக்கப்பட்டார். இது போதைப்பொருள் கடத்தல் மீதான கடுமையான சட்டங்களுக்கு பெயர் பெற்ற சிங்கப்பூரில் 500 கிராம்முக்கு அதிகமாக கஞ்சா இருந்தால் மரண தண்டனையாகும்.
மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்ததையடுத்து, தங்கராஜூ தூக்கிலிடப்பட்டதை அந்தக் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கப்பூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் கோகிலா அண்ணாமலை உறுதிப்படுத்தினார்.
மரணதண்டனையை எதிர்த்துப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன், தங்கராஜூக்கு எதிரான தீர்ப்பு குற்றவியல் தண்டனைக்கான தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் போதைப்பொருள் அருகில் இல்லை என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்த சிங்கப்ப்பூர் அரசாங்கம், பிரான்சன் பொய்களை பரப்புவதாகவும், அதன் நீதி அமைப்பை அவமதிப்பதாகவும் கூறியது, அதன் நீதிமன்றங்கள் வழக்கை ஆராய்ந்து பார்க்க மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செலவிட்டதாகவும், பிரான்சனின் கூற்று “அப்பட்டமான பொய்” என்றும் கூறியது.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் சிங்கப்பூருக்கு மரணதண்டனையைத் தொடர வேண்டாம் என்றும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான மரணதண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தது.
சிங்கப்பூர் கடந்த ஆண்டு 11 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியது. மேலும், மரண தண்டனை சட்டம் என்பது போதைப்பொருள் கடத்தலை தடுக்க ஒரு பயனுள்ள சட்டம் என்றும் அதனை பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதாகவும் அது கூறுகிறது.