எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கான ஒதுக்கீட்டை வழங்க அரசுக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளது

ஒற்றுமை அரசாங்கம் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஒரு ஒதுக்கீட்டை வழங்கக் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது, ஆனால் அவர்களின் நிர்வாகச் செலவுகளுக்கு மட்டுமே என்று துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இந்த விவகாரம் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும், துணைப் பிரதமர் ஃபாதில்லா யூசோப் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிடுவார் என்றும் அவர் கூறினார்.

“இந்த நிலையில், நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட இந்த ஒதுக்கீட்டை வழங்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்று அவர் இன்று பாலிங்கில் உள்ள தேசா கேடா சாடெக்கில் நடந்த நடைபயண நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.

கிராமப்புற மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சரான ஜாஹிட் (மேலே) எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அரசாங்கம் ஒதுக்கீடுகளை வழங்குமா என்று கேட்டபோது இவ்வாறு கூறினார்

இதற்கு முன்னர், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கான நிதி ஒதுக்கீடுகள்குறித்த ஆரம்ப விவாதங்களின்போது பெரிக்காத்தான் நேசனல் (PN) எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று ஃபாடில்லா கூறியதாக ஊடகங்களால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கெடாவில் மாநிலத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு செயல்முறைகுறித்து BN மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இறுதி கட்ட விவாதத்தில் இருப்பதாக BN தலைவரான ஜாஹிட் கூறினார்.

“கெடாவில் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை நாங்கள் முடிவு செய்து வருகிறோம். மற்ற ஐந்து மாநிலங்களுக்கும்,  இந்த விவகாரம் அறிவிக்கப்படும்,”என்று அவர் கூறினார்.