கர்ப்பிணிப் பெண்களுக்கு Tdap தடுப்பூசி போட MOH திட்டமிட்டுள்ளது

கக்குவான் இருமல் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு  Tdap (Tetanus, Diphtheria, and Acellular Pertussis) தடுப்பூசியை வழங்கச் சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

தேசிய நோய்த்தடுப்பு அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி ஆறு டோஸ் முதன்மைத் தொடரை முடிக்கும் வரை குழந்தைகளைப் பிறப்பிலிருந்து பாதுகாப்பதை இந்தத் தடுப்பூசி நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா கூறினார்.

“நாட்டில் பெரும்பாலான பெர்டுசிஸ் நேர்வுகள் ஐந்து மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளிடையே உள்ளன, அவர்கள் மூன்று டோஸ் முதன்மை பெர்டுசிஸ் தடுப்பூசி இன்னும் முடிக்கப்படாததால், நோய் எதிர்ப்பு சக்தியின் உகந்த அளவை அடையவில்லை,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சாலிஹாவின் கூற்றுப்படி, ஏப்ரல் 28 நிலவரப்படி, நாட்டில் 132 பெர்டுசிஸ் அல்லது கக்குவான் இருமல் நேர்வுகள் மற்றும் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, இது ஏப்ரல் 28, 2019 அன்று பதிவான 495 நேர்வுகளுடன் ஒப்பிடும்போது 73.3 சதவீதம் குறைவு.

12 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் அதிக எண்ணிக்கையிலான நேர்வுகள் 67 (50.8 சதவீதம்), அதைத் தொடர்ந்து 1 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 47 நேர்வுகள் (35.6 சதவீதம்) மற்றும் மீதமுள்ளவை 11 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.

தடுப்பூசி ஒரு பயனுள்ள பெர்டுசிஸ் தடுப்பு முறையாகும், மேலும் மலேசியாவில், குழந்தைகளுக்கு இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள், ஐந்து மாதங்கள் மற்றும் 18 மாதங்களில் பெர்டுசிஸ் தடுப்பூசி வழங்கப்படுகிறது என்று சாலிஹா கூறினார்.

“பெர்டுசிஸ் நோய்த்தடுப்பு பாதுகாப்பு எப்போதும் 95 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் சமூகத்தில் பெர்டுசிஸ் தொற்றுகளைத் தடுக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டுப் பதிவு செய்யப்பட்ட 132 நேர்வுகளில், 89 நேர்வுகள் அல்லது 67.4 சதவீதம் குடிமக்கள் சம்பந்தப்பட்டவை, அதே நேரத்தில் 43 வழக்குகள் அல்லது 32.6 சதவீதம் குடிமக்கள் அல்லாதவர்கள் என்று ஜாலிஹா கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோய் தாக்கி நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடைமுறைக்கு வந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் பெர்டுசிஸ் நேர்வுகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்தது என்று அவர் கூறினார்.

அறிகுறிகள் உள்ளவர்கள் இருமல் மற்றும் தும்மும்போது வாயை மூடிக் கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருக்க உடனடியாகக் கைகளைக் கழுவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெர்டுசிஸ் என்பது தடுப்பூசி-தடுக்கக்கூடிய நோயாகும், இது போர்டெடெல்லா பெர்டுசிஸ் பாக்டீரியாவால்(bacterium Bordetella pertussis) ஏற்படுகிறது, இது பாதிக்கப்பட்ட நபரின் வாய், மூக்கு மற்றும் தொண்டையில் காணப்படுகிறது.

இந்தப் பாக்டீரியா இருமல் மற்றும் தும்மலின்போது உற்பத்தி செய்யப்படும் சுவாச நீர்த்துளிகள்மூலம் பரவுகிறது மற்றும் அனைத்து வயதினரையும் பாதிக்கும்.

பெர்டுசிஸின் பொதுவான அறிகுறி இருமல் ஆகும், இது ஒன்று முதல் இரண்டு வாரங்கள்வரை நீடிக்கும் மற்றும் இரண்டு மாதங்கள்வரை நீடிக்கும்.