தேர்தலில் கழுதை ஜெயிக்குமா?

வேலு: கோமாளி, கழுதை தேர்தலில் நின்றால் ஜெயிக்குமா? நீங்கள் நின்றால் என்ன செய்வீர்கள்? 

கோமாளி: ஒன்பதாவது பொதுத் தேர்தலின்போது (1995) உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் நின்ற பழனிவேலுவின் தேர்தல் விபச்சார உரையை கேட்க நேர்ந்தது. “கழுதை கழுத்தில் பாரிசான் சின்னத்தை கட்டினால் போதும், கழுதை கூட ஜெயிக்கும்” என்றார். அதில் இரண்டு பக்கமும் உண்மை இருந்தது.

இன்று மக்கள் எட்டி உதைக்க ஆரம்பித்து விட்டனர். எனவே, கழுதைகள் மாறுவேடம் போட்டுத்தான் வேட்பாளராக வர இயலும்.

நியாயமான தேர்தல் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வமும் எழும்பி உள்ளது. இவையெல்லாம் உலகமெங்கும் உள்ள மக்களின் ஒருமித்த சனநாயக தாகமாகவே காட்சி தருகிறது. அராப் நாடுகள் முதல் தற்போது ரஷ்யா வரையிலும் தொடர்ச்சியாக வெகுண்டெழுந்துள்ள மக்கள், நியாயத்தையும் நீதியையும் கோருகின்றனர்.

நமது நாட்டில் தேசிய முன்னணிக்கு கிலி பிடித்துவிட்டது. வாக்குகளை வாங்க லஞ்சம் லஞ்சமாக லட்சக்கணக்கில் செலவிடுகின்றனர். அண்மையில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்த தோசையை திருப்பிப்போடும் நிகழ்வொன்று இந்திய ஆய்வியல் துறையோடு நடந்தேறியது. அடுத்தது, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இவர்களிடையே சோரம் போக யாரும் உள்ளனரா? என்ற ஏக்கத்தில் வலம் வருவார்கள். மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் மேலும் கொள்ளையடிக்க புறப்பட்டுள்ள கும்பல்கள் உங்கள் கதைவையும் தட்டும், வேலு.

இந்தியர்களைப் பொறுத்தமட்டில் தற்போதைய திருப்புமுனை அரசியலில் அவர்களது வாக்குகள் புதிய மாற்றத்தை கொணரவே பயன்படுத்தப்பட வேண்டும்.

“கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பதுபோல, குருடர்களை மீண்டும் தேர்வு செய்யும் மூடர்களாக நம்மில் பலர் இல்லை என்ற தோற்றமே தெரிகிறது. அண்மையில் நடந்த ஒரு சமய மாநாட்டில் பேசிய மதிப்புக்குரிய முத்து குமாரக் குருக்கள், “பழைய குருடி, கதவைத் திறடி, என்று தட்டுவார்கள், கதவைத் திறந்தால் நாம் மீண்டும் குருடராகவே ஆகி விடுவோம்” என்ற வியாக்கியானத்தை நினைவுபடுத்தினார்.

தேர்தலில் நின்றால்தான் அரசியல் மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பது தவறு. அரசியல் மாற்றத்தை அரசியல் விழிப்புணர்ச்சி கொண்ட மக்களால்தான் கொண்டு வர இயலும் என்பதைத்தான் கோமாளி விவரித்து வருகிறேன்.

மக்களின் பிரதிநிதிதான் தேர்தலில் வெற்றிபெறுகிறார். அது கோமாளியோ, வேலுவோ! யாராக இருந்தாலும் அவர்கள் மக்களின் உணர்வுகளை பிரதிநிதித்து நாட்டை உயர்த்த வேண்டும்.

பெல்ஜியம் என்ற நாட்டில் 13.6.2010 முதல், தேர்தல் நடந்தும் பெரும்பான்மை இல்லாததால், அரசாங்கம் அற்ற வகையில் அந்த நாட்டின் நிர்வாகம் சிறப்பாகவே நடந்து வருகிறது. எல்லாம் மக்கள் கையில்தான்.