பினாங்கு மசீச இளைஞர் தலைவரும் 439பேரும் கட்சி விலகினர்

நேற்றிரவு பினாங்கு மசீச இளைஞர் தலைவர் எங் ஹியாப் பூன், கட்சியிலிருந்து விலகுவதாக  திடீர் அறிவிப்பைச் செய்தார்.

தம்முடன் 439 உறுப்பினர்களும் கட்சி விலகியிருக்கிறார்கள் என்று எங்(வலம்) தெரிவித்தார்.இதன் விளைவாக இரண்டு மசீச கிளைகள் மூடப்பட்டன.

 “என் சகாக்களும் நானும் கட்சித் தலைவர்களின் ஒழுக்கக்கேடுகளையும் நெறிமுறையற்ற செயல்பாடுகளைக் கண்டும் ஏமாற்றமடைந்திருக்கிறோம்”, என்று எங் நேற்றிரவு ஜார்ஜ்டவுனில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

கட்சிக்குள் உள்சண்டை தொடர்வதாகவும் தலைவர்கள் அடிநிலை உறுப்பினர்கள் சொல்வதைக் கேட்பதுமில்லை; மக்களுக்கு உண்மையான சேவையாற்றுவதுமில்லை என்றாரவர்.

எங், மசீச முன்னாள் தலைவர் ஒங் தி கியாட்டின் “வலுவான ஆதரவாளர்” என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. என்றாலும், கட்சியைவிட்டு விலகியது தம் சொந்த முடிவாகும் என்றவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு ஜோகூரிலும் 500 மசீச உறுப்பினர்கள் கட்சிவிலகியிருக்கக்கூடும் என்று எங் கூறினார்.

“இந்த வெளியேற்றம் எப்போது நிற்கும் என்று எனக்குத் தெரியவில்லை. மசீச தலைமை உண்மையாகவே சுய-ஆய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும்”.

மசீச தலைமை சீனர் சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளைப் பற்றி அறியாதிருக்கிறது. உறுப்பினர்கள் மக்களுக்குத் தொண்டு செய்ய முனைந்தால் அதையும் மதிப்பதில்லை என்றாரவர்.

கட்சித் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், கட்சித் தேர்தலுக்கு முன்னதாக மூத்த உறுப்பினர்களுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்தாக எங் கூறினார். நியாயமாக மக்களுக்காக அப்பணத்தைச் செலவிட்டிருக்க வேண்டும்.ஆனால், அதைச் செய்யவில்லை என்றவர் குற்றம் சாட்டினார்.

உலகில் சீனர்களைப் பிரதிநிதிக்கும் இரண்டாவது பெரிய கட்சி மசீச-தான் ஆனால், அதில் உறுப்பினராக இருப்பதற்கே வெட்கப்படுவதாக எங் கூறினார். ஏனென்றால்,“இது ஒழுக்கங்கெட்ட தலைவரால் வழிநடத்தப்படும் ஓர் உளுத்துப்போன கட்சி”.

பினாங்கு மாநில மசீச தலைவர் டாக்டர் இங் யென் யென், கடந்த மூன்று நான்கு மாதங்களாக கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை என்றுன் எங் குறைப்பட்டுக் கொண்டார்.

இப்படித் திறமைக்குறைவான தலைவர்கள் இருப்பதால், எதிர்வரும் தேர்தலில் பினாங்கைத் திரும்பவும் கைப்பற்றுவது சிரமமாக இருக்கும் என்றாரவர்.