மலேசிய மருத்துவ சங்கத்தின் மாணவர் வழிகாட்டல் கருத்தரங்கு

இராகவன் கருப்பையா- மலேசிய மருத்துவ சங்கம் எதிர்வரும் மே மாதம் 13, 14 தேதிகளில் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை நடத்தவிருக்கிறது.

15 முதல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான இக்கருத்தரங்கு, அவர்கள் சரியான மேற்கல்வியை தேர்வு செய்வதை உறுதி செய்யும் என சங்கத்தின் தலைவர் டாக்டர் முருக ராஜ் ராஜதுரை கூறினார்.

குறைந்த பட்சம் அடுத்த 30 ஆண்டுகளுக்கு அத்தொழிலில் அவர் ஈடுபடவிருப்பதால் சரியான  இலக்கை தேர்வு செய்து தங்களுக்கு ஏற்றவாறு அதனை அனுபவிப்பது அவசியமாகும் என்றார் அவர்.

சரியான வழிகாட்டல் இல்லாத பட்சத்தில் சில மாணவர்கள் பாதியிலேயே தங்களுடைய உயர் கல்வியை கைவிட வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி குடும்பத்திருக்கும் சமுதாயத்திற்கும் பேரிழப்பாக அது அமைந்துவிடுகிறது.

சங்கத்தின் வரலாற்றில் இது போன்ற ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று கூறிய முருக ராஜ் மருத்துவம் உள்பட15 வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த மொத்தம் 21 பேர் தங்களுடைய அனுபவங்களை பகிர்வதோடு நிபுணத்துவ ஆலோசனைகளையும் வழங்கவிருப்பதாக குறிப்பிட்டார்.

அந்த வல்லுநர்களின் விளக்கங்கள் தெளிவானதொரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு பல்வேறு துறைகளில் மாணவர்கள் எதிர்நோக்கக் கூடிய சவால்கள் குறித்தும் வெளிச்சத்தை ஏற்படுத்தும்.

மாணவர்கள் எதிர்கால தொழில் வாய்ப்புகள் மீதான எதிர்பார்ப்புகளையும் யதார்த்தங்களையும் ஒருங்கிணைத்து சிறப்பானதொரு முடிவெடுப்பதற்கு இக்கருத்தரங்கு உதவும் என அவர் மேலும் விவரித்தார்.

விளம்பரங்களின் வழியும் நிகழ்ச்சி ஆதரவாளர்களின் ஒத்துழைபாலும்  கிடைக்கும் மொத்த வருமானமும் மாணவர்களுக்கான கல்வி நிதியில் சேர்க்கப்படும் என்றார் அவர்.

தலைநகர் மிட் வேலி-இல் உள்ள கார்டன்ஸ் ஹோட்டலில் இலவசமாக நடத்தப்படவிருக்கும் இக்கருத்தரங்கில் பெற்றோர்களும் எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களும் கூட பங்கேற்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மேல் விபரங்களுக்கு, மலேசிய மருத்துவ சங்கத்தை தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 03-40411375