அம்னோவின் ஜாஹிட் இல்லையென்றால் மலேசியா மாறுபட்டிருக்கும் – அன்வார்

கடந்த 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் வரலாற்றை வடிவமைக்க அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் அம்னோ கட்சியின் எம்.பி.க்கள் உதவியதுக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று பாராட்டினார்.

அம்னோவில் துணைத் தலைவராக இருந்த அன்வார் 25 ஆண்டுகளுக்குப் முன்பு அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன் பிறகு இப்பொழுதுதான் டேவன் மெர்டேக்கா அரங்கத்தில் மீண்டும் நுழைகிறார்.

அன்வார், இரண்டு துணைப் பிரதமர்களில் ஒருவராக ஜாஹிட் நியமிக்கப்பட்டதால் பல “தாக்குதல்களை” பெற்றதாகவும் குறிப்பிட்டார்.

“என் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உட்பட கடுமையான தாக்குதல்களை ஜாஹிட்டும்  எதிர்கொண்டார்” என்றார்.

கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் உள்ள அம்னோவின் தலைமையகம் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டு மாநாடு 2023 இல் கலந்து கொண்ட அன்வார், தனது உரையில்,”நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், அம்னோ தலைவர் ஜாஹிட்டின் உறுதியும், அம்னோ எம்.பி.க்களின் ஆதரவும் இல்லாவிட்டால், இன்றைய நமது வரலாறு வேறாக இருக்கும்” என்றார்.

“எனவே அவரது பங்கையும் அம்னோவின் பங்கையும் நாம் பாராட்ட வேண்டும்” என்று மடானி அரசாங்கத்தை அமைக்கும் நான்கு கூட்டணிகள் மற்றும் 19 கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த மண்டபத்தில் அன்வார் உரையாற்றினார்.