முன்னாள் நீதிபதி அரிபின் ஜகா காலமானார்

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரிபின் ஜகா,78, செர்டாங்  மருத்துவமனையில் இன்று காலை மணி 6.05க்குக் காலமானார்.

எதற்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால்,  நீண்ட நாள்களாகவே அவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்தது. அரிபின் காலமானதை மலேசிய வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ உறுதிப்படுத்தினார்.

அரிபின்தான், 2000-ஆம் ஆண்டில் அன்வார் இப்ராகிமின் முதலாவது குதப்புணர்ச்சி வழக்கை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்த நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வழக்கில் அன்வாருக்கு ஒன்பதாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவ்வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது. ஆனால்கூட்டரசு நீதிமன்றம் இரண்டுக்கு ஒன்று என்ற பெரும்பான்மையில் அத்தீர்ப்பைத் தள்ளுபடி செய்து அன்வாரை விடுவித்தது.

அவ்வழக்கைத் தொடர்ந்து அரிபினும் இன்னொரு நீதிபதியான ஆகஸ்டின் பாலும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தப்பட்டனர்.

காலஞ்சென்ற ஆகஸ்டின், அன்வாரின் ஊழல் வழக்கை விசாரித்தவர். பின்னர் அவர் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஆகவும் பதவி உயர்வு பெற்றார். 2010-இல் அவர் காலமானார்.

அரிபின், இன்று ஸொஹோர் தொழுகைக்குப் பின் புத்ரா ஜெயாவில் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.