நிர்வாகத்தில் இணைந்து பணியாற்ற DAP இன் “முன்மொழிவு” இருந்தபோதிலும் பாஸ் பெரிக்காத்தான் நேசனலுக்கு (PN) விசுவாசமாக இருக்கும்.
இஸ்லாமியக் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் உத்துசான் மலேசியாவிடம் கூறுகையில், 15 வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு (GE15) எதிர்க்கட்சிக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதன் மூலம் பாஸ் அதன் ஆதரவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு எதிராக ஒருபோதும் செல்லாது என்று கூறினார்.
“DAP உடன் எங்களுக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை, ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நாங்கள் கடைபிடிப்போம், நாங்கள் வாக்காளர்களுக்கு (PN ஐ விட்டு வெளியேறுவதன் மூலம்) பொய் சொல்லமாட்டோம்,” என்று அவர் உத்துசான் மலேசியாவிடம் கூறினார்.
லிம் கிட் சியாங்
அவரைப் பொறுத்தவரை, பாஸ் மற்றும் PN பொதுவாக, நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக இருக்க விரும்புகிறது.
வரவிருக்கும் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாகக் கூட்டணி அரசாங்கம் பாஸ் உடன் ஒத்துழைக்க வேண்டும் என்று DAP மூத்த தலைவர் லிம் கிட் சியாங்(Lim Kit Siang) முன்வைத்த முன்மொழிவு குறித்து துவான் இப்ராஹிம் கருத்து தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீதான பகைமையை நிறுத்திவிட்டு, முதலில் நேர்மையைக் காட்டுமாறு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, பிரதமர், அன்வார் இப்ராஹிம் மற்றும் பாஸ் மத்திய குழு உறுப்பினர், நிக் முகமட் அப்து நிக் அப்துல் அஜிஸ் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, கிளந்தான் கோட்டா பாருவில் கேள்விகளை எழுப்பியது,
இந்தச் சந்திப்பின்போது, தம்புன் எம்.பி., ஹாடியுடன் மீண்டும் உறவை ஏற்படுத்த விரும்புவதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.
உண்மையில், பல தசாப்தங்களாகப் பாஸ் தலைமையிலான கிளந்தான் எதிர்கொள்ளும் நீர் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதாக அன்வார் கூறினார்.