தெற்கு கிளந்தான் மேம்பாட்டு ஆணையத்தில் (Kesedar) 24.8 மில்லியன் ரிங்கிட்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை போலீசார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
உதவி கணக்காளராக இருந்த அந்த நபர், 2016 முதல் 194 பரிவர்த்தனைகளைச் செய்துள்ளதாகவும், மொத்தம் ரிம24,800,189.73 ஐ கேசெடர் கணக்குகளில் இருந்து தனக்கு சொந்தமான நிறுவனத்தின் கணக்குகளுக்கு மாற்றியதாகவும் போலீசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
“எங்களுக்குக் கிடைத்த அறிக்கையின் அடிப்படையில், மே 27 நள்ளிரவு 12.21 மணியளவில், குவா முசாங் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் குழு சந்தேக நபரைக் கிளந்தானின் பண்டார் குவா முசாங்கில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தது”.
“சந்தேக நபர் (37 வயது) மேலதிக விசாரணைக்காக இன்று முதல் ஜூன் 2 வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று கிளந்தான் காவல்துறைத் தலைவர் முகமட் ஜாகி ஹாருன் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட சொத்துக்கு எதிராக நம்பிக்கை மீறல் குற்றத்தில் ஈடுபடும் ஊழியர்கள் குறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 408 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.