லோரோங் சுல்தானில்(Lorong Sultan) ஒரு மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் உள்ள நடைமுறைகள் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக 24 கவுன்சிலர்களில் 19 பேர் வெளிநடப்பு செய்ததைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா நகர கவுன்சில் (MBPJ) முழு வாரியக் கூட்டம் இன்று திடீரென முடிவுக்கு வந்தது.
பெட்டாலிங் ஜெயா மேயர் முகமட் அசான் முகமட் அமீர்(Mohamad Azhan Md Amir) தலைமையிலான கூட்டத்தின்போது சூடான வாக்குவாதம் நடந்ததாக ஆங்கில நாளேடான தி ஸ்டார் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, ஒன்-ஸ்டாப் சென்டர் (OSC) விவாதத்தில் கவுன்சிலர்கள் முடிவெடுப்பவர்கள் அல்ல என்றும், அவர்கள் சமூக மற்றும் அரசியல் அம்சங்களில் உள்ளீடுகளை வழங்க மட்டுமே இருந்தனர் என்றும் அசானின் கூற்றை 19 கவுன்சிலர்கள் ஏற்கவில்லை.
முன்மொழியப்பட்ட மனை விகிதம் பரிசீலனையின் போது நகரத்தின் அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதால் OSC முன்னதாக இந்தத் திட்டத்தை நிராகரித்ததாக எம்.பி.பி.ஜே கவுன்சிலர் டெரன்ஸ் டான் கூறினார்.
“டெவலப்பர் பின்னர் மாநில மேல்முறையீட்டு வாரியத்தில் மேல்முறையீடு செய்தார்”.
“இதற்கிடையில், மனை விகிதம் குறித்த புதிய வழிகாட்டுதலை அரசு கொண்டு வந்தது,” என்று டான் கூறினார்.
“டெவலப்பர் மாநிலத்தின் புதிய வழிகாட்டுதலைப் பின்பற்றி, பரிசீலனைக்காக மற்றொரு விண்ணப்பத்தை ஓ.எஸ்.சி.யிடம் சமர்ப்பித்தார்”.
“கடந்த மாதம் நடந்த OSC கூட்டத்தில், நான்கு கவுன்சிலர்களில் மூன்று பேர், கூட்டத்தில் பெரும்பான்மையினர், புதிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பு டெவலப்பர் தனது மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
எனவே, OSC., கூட்ட அறிக்கை முழு வாரியக் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வாசிக்கப்பட்டபோது, ஒப்புதல் வழங்கப்பட்ட விதம்குறித்து, பல கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
தானும் வெளிநடப்பு செய்த பல கவுன்சிலர்களும் இந்த வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் எம்.பி.பி.ஜே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று மட்டுமே விரும்புவதாகவும் டான் கூறினார்.
“இந்த விவகாரம் இன்னும் மாநில மேல்முறையீட்டு வாரியத்தில் உள்ளது. ஓ.எஸ்.சி ஒரு முடிவை எடுப்பது சரியல்ல, “என்று அவர் மேலும் கூறினார்.
கூட்டத்தில் இருந்து வெளியேறிய நடவடிக்கை, கோரம் இல்லாததால் MBPJ வாரியக் கூட்டம் திடீரென முடிவடைய காரணமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.