உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சு இதுவரை நாடு முழுவதும் 481 “கவலைக்கிடமான” திட்டங்களையும் 112 கைவிடப்பட்ட திட்டங்களையும் அடையாளம் கண்டுள்ளது என்று பிரதி அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர்(Akmal Nasrullah Mohd Nasir) தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை மேற்பார்வையிட ஒரு பணிக்குழுவைக் கொண்டிருப்பதைத் தவிர, அமைச்சகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திட்டங்களைப் புதுப்பிக்கும் முயற்சிகளில் தேசிய நீர் சேவைகள் ஆணையம் (SPAN) மற்றும் பொதுப்பணித் துறையுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
“கவலைக்கிடமான மற்றும் கைவிடப்பட்ட திட்டங்கள் அவற்றின் திட்டமிடப்பட்ட நிறைவுக் காலத்தைவிட அதிகமாக உள்ளன, மேலும் நீண்ட கால விவாதங்கள் தேவைப்படுவதால் அவற்றைப் புதுப்பிக்க அதிக நேரம் எடுக்கும்,” என்று அவர் கூறினார்.
கிளந்தான், லபோக், ஜாலான் பாங்கோல் யூதாவில் உள்ள தாமான் பைடூரி வீட்டுவசதித் திட்டத்திற்கு நேற்று வருகை தந்தபின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
1மலேசியா வீட்டுவசதி திட்டத்தின் (PR1MA) கீழ், 21 “கவலைக்கிடமான” திட்டங்கள் இருந்தன, ஆனால் அவற்றில் எட்டு திட்டங்கள் ஐந்து மாதங்களுக்குள் அமைச்சகத்தால் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன என்று அக்மல் நஸ்ருல்லா கூறினார்.
“இந்த ஆண்டு குறைந்தது 10 PR1MA திட்டங்களை முடிக்க நாங்கள் விரும்புகிறோம், இந்த இலக்கை அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
டெவலப்பர்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இடையில் எழும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகத் தொழில்நுட்ப முகமைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடனான வழக்கமான சந்திப்புகள் மூலம் நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்போம் என்று அவர் கூறினார்.
இந்த மோசமான திட்டங்களை முன்மொழியப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை தொடர்ந்தும் முனைப்புடனும் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
“நிர்ணயிக்கப்பட்ட திட்டத்தைப் பின்பற்றாத தனியார் வீட்டுத் திட்டங்களில் அதிக சதவீதத்தைக் கொண்ட மாநிலங்களில் கிளந்தான் ஒன்றாகும்”.
“எனவே, 2024 க்குள் தாமதமான மற்றும் ‘கவலைக்கிடமான’ திட்டங்களை 50 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.