லிம் கிட் சியாங்கிற்கு விருது வழங்குவது தொடர்பாக யாங் டி-பெர்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக ஒரு பெண்ணைப் போலீசார் கைது செய்தனர்.
32 வயதான அந்தப் பெண் ஜூன் 13 அன்று செபராங் பேராய் உத்தாரா (Seberang Perai Utara) மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டதாகப் பினாங்கு காவல்துறைத் தலைவர் காவ் கோக் சின் தெரிவித்தார்.
“ஜூன் 7 ஆம் தேதி, சமூக ஊடகங்களில் உள்ள சில உள்ளடக்கங்கள் யாங் டி-பெர்துவான் அகோங்கிற்கு எதிரான அவமதிப்புகள் மற்றும் பொது ஒழுங்கைப் பாதிக்கக்கூடும் என்று கருதப்படுவது குறித்து காவல்துறையினருக்கு பொதுமக்களிடமிருந்து அறிக்கைகள் கிடைத்தன”.
“ஜூன் 13 அன்று, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (Criminal Investigation Department) இரகசிய குற்றப் புலனாய்வுப் பிரிவு (Classified Crime Investigation Unit) விசாரணைக்கு உதவுவதற்காக அந்தப் பெண்ணைக் கைது செய்தது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அகோங்கை அவமதித்ததோடு மட்டுமல்லாமல், மே 13 கலவரத்தைத் தூண்டியதாக லிம் மீது அந்தப் பெண் குற்றம் சாட்டியதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிக விசாரணைகளுக்காகப் பெண்ணின் மடிக்கணினி, மொபைல் போன் மற்றும் சிம் கார்டை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அன்றே அந்தப் பெண் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதால் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
“தேசத்துரோகச் சட்டம் 1948 இன் பிரிவு 4 (1) மற்றும் தகவல்தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1988 இன் பிரிவு 233 ஆகியவற்றின் படி புக்கிட் அமான் இந்த வழக்கை விசாரித்து வருகிறது,” என்று அவர் கூறினார்.