‘தொழிற்பயிற்சி நிதியை அமைக்க அமைச்சகங்கள் ஒத்துழைக்க வேண்டும்’ – பர்ஜோய் பர்தாய்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சியாளர்களுக்கு நிதி உதவி வழங்க ஒரு தொழில்துறை பயிற்சி நிதியை உருவாக்க மனிதவள அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட உயர்கல்வி அமைச்சகம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் துன் அப்துல் ரசாக் பொருளாதார வல்லுநர் பர்ஜோய் பர்தாய்(Barjoyai Bardai) கூறுகையில், இந்த நிதியத்தை நிறுவுவதன் மூலம் தொழில்துறை பயிற்சியாளர்களுக்கு அவர்களின் பயிற்சியின்போது அவர்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யப் பொருத்தமான கொடுப்பனவுகளை வழங்குவதை ஒருங்கிணைக்க முடியும் என்றார்.

“உயர்கல்வி நிறுவனம் மனிதவள மேம்பாட்டு நிதியத்துடன் (Human Resources Development Fund) ஒத்துழைக்க முடியும், ஏனெனில் HRDF-க்கு பங்களிக்கும் நிறுவனங்கள் தங்கள் வேலைகளுக்கு ஏற்றப் பயிற்சி சலுகைகளை இலவசமாக அனுபவிக்க முடியும்”.

“எனவே, நிறுவனம் கூட்டாக ஒரு தொழில்துறை பயிற்சி நிதியை உருவாக்கி மனிதவள மேம்பாட்டுக்குப் பங்களிக்க முடிந்தால், தொழில்துறை பயிற்சி கொடுப்பனவை சரிசெய்வது எளிதாக இருக்கும், இதனால், தொழில்துறை பயிற்சி பெறும் மாணவர்களின் சுமை குறையும்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

நேற்று, பிரதமர் அன்வார் இப்ராஹிம், பயிற்சியாளர்களுக்கு அவர்களின் அன்றாட செலவுகளை ஈடுசெய்ய உதவும் வகையில் நியாயமான தொகையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு நிறுவனங்களை வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், தொழில்துறை பயிற்சி கட்டாயமில்லை என்பதால் அரசாங்கம் எந்தவொரு நிலையான கட்டண விகிதங்களையும் நிர்ணயிக்காது என்று அன்வார் கூறினார்.

பர்ஜோயின் கூற்றுப்படி, மாணவர்கள் நிறுவனத்திற்கு வருமானம் அல்லது இலாபத்தை வழங்க முடிந்தால் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் உற்பத்தித்திறனுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படலாம், ஏனெனில் முதலாளி மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்.

இன்று மாணவர்கள் எதிர்கொள்ளும் அதிக வாழ்க்கைச் செலவை ஒப்புக்கொண்ட பர்ஜோய், இருப்பிடத்தைப் பொறுத்து தங்குமிடம் மற்றும் போக்குவரத்து செலவுகளைத் தவிர்த்து, ஒரு மாணவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதத்திற்கு குறைந்தது 500 ரிங்கிட் தேவைப்படும் என்று கூறினார்.

இதற்கிடையில், தீபகற்ப மலாய் மாணவர்களின் கூட்டமைப்பின் (GPMS) பொதுச் செயலாளர் முகமட் அஸ்ரி அப்துல் அஜீஸ், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இன்டர்ன்ஷிப் ஊதிய மானியம் அல்லது சிறப்பு வரி நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

கோவிட் -19 தொற்றுநோய் காரணமாகப் பல நிறுவனங்கள் இன்னும் பொருளாதார மீட்பு செயல்பாட்டில் இருப்பதால், இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினருக்கும் வெற்றிகரமான சூழ்நிலையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

“வாழ்க்கைச் செலவு எதிர்பாராத வகையில் தொடர்ந்து அதிகரித்து வருவதையும், கல்விக் கடன்கள் மற்றும் உதவித்தொகைகள் குறைந்து வருவதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம், ஆனால் மாணவர்கள் இன்டர்ன்ஷிப்பின் முக்கிய நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்”.

“இந்த மாணவர்களுக்குத் தங்கள் நிறுவனங்களில் பயிற்சி அளிக்கத் தொழில்துறையின் விருப்பத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியம், ஆனால் தொழில்துறை மாணவர்கள்மீது நிதி தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்குச் சில பணிகளைத் திணிக்கக் கூடாது,” என்று அவர் கூறினார்.