பினாங்கில் நேற்று மதிய உணவு நிகழ்ச்சிக்காக 30 வாகன நிறுத்துமிடங்களை ஆக்கிரமித்ததாகக் கூறப்படும் உள்ளூர் அரசாங்க மேம்பாட்டு அமைச்சர் என்கா கோர் மிங் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ராக்கெட்டின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், என்கா (மேலே) இந்த விஷயத்தைப் பற்றித் தனக்கு எந்த முன்னறிவிப்பும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
“இந்தச் சம்பவம் பினாங்குவாசிகளுக்கும் உள்ளூர் வணிகங்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியிருந்தால், நான் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
“உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சகம் (பார்க்கிங்) ஏற்பாடுகளை மறுபரிசீலனை செய்யும் மற்றும் உத்தியோகபூர்வ ஆய்வுகளின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
பினாங்கு தீவு நகர மன்றம் வியாழக்கிழமை இரவு கேம்பெல் தெருவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே என்காவின் குழுவிற்காக வாகன நிறுத்துமிடங்களை ஒதுக்கியதாகச் சீனா பிரஸ் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து என்கா மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும், அங்கு இரவு முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வேறு இடங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும், அந்த வாகன நிறுத்துமிடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் ராஜேந்திரன் கூறுகையில், வி.ஐ.பி., க்களுக்கு முன்கூட்டியே வாகன நிறுத்துமிடங்களை ஒதுக்குவது வழக்கமான நடைமுறை.
கார்கள் அருகில் உள்ள இடங்களுக்கு நகர்த்தப்பட்டதாகவும், ஆனால் இழுத்துச் செல்லப்படவில்லை என்றும் ராஜேந்திரன் கூறியதாகத் தி ஸ்டார் மேற்கோளிட்டுள்ளது.