இராகவன் கருப்பையா – திருமண வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கும் எதிர்பாராமல் நிகழும் சிக்கல்களை எதிர்நோக்குவதற்கும் ஒவ்வொரு இளைஞரும் முன்னதாகவே தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
இப்படிப்பட்ட சூழல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இல்லாதவர்களின் திருமண வாழ்க்கைதான் மிக விரைவில் விவாகரத்தில் முடிகிறது என உளவியலாளரும் திருமண மற்றும் பெற்றோரியல் கல்வியாளருமான குணபதி ஆறுமுகம் கூறுகிறார்.
முஸ்லிம் இளைஞர்கள் சட்டபடி திருமணத்திற்கு முன்னைய கல்வி வகுப்புகளில் கலந்து கொள்வது அவசியமாகும். முஸ்லிம் அல்லாதாரும் இத்தகைய பயிற்சிகளில் கலந்து கொள்வதை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருகிறது.
திருமணத்திற்கு முந்திய கல்வித்திட்டம், தம்பதிகளிடையே வெறுமை நிறைந்த திருமண வாழ்வியலையும், விவாகரத்திற்கான விழுக்காட்டைக் குறைக்கும் திறனையும் கொண்டுள்ளது என்பதை ஆதாரமான ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன என குணபதி கூறினார்.
இத்தகைய பயிற்சி வகுப்புகள் தரமான குடும்ப உறவுகளுக்கு அடித்தளமாக அமைவது திண்ணம் என அவர் வலியுறுத்துகிறார்.
இதன் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 8ஆம் தேதியன்று தேசிய நிலையிலான மாநாடு ஒன்று தலைநகரில் நடைபெறவுள்ளது.
திருமண மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்துவதற்கான தேசிய அமைப்பு கோலாலம்பூர் பண்டார் துன் ரஸாக்கில் அமைந்துள்ள அனைத்துலக இளைஞர் மாநாட்டு மையத்தில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
முஸ்லிம் அல்லாதாருக்கென இதுபோன்ற ஒரு மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். காலை 8.00 மணியிலிருந்து மாலை 5.30 வரையில் இலவசமாக நடத்தப்படும் இம்மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சிற்றுண்டியும் மதிய உணவும் மட்டுமின்றி சான்றிதழும் வழங்கப்படும்.
குடும்ப உறவுகள் தொடர்பான விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ள கல்விமான்களும் அறிஞர்களும் இம்மாநாட்டில் உரை நிகழ்த்தவுள்ளனர்.
மேல் விவரங்களுக்கு குணபதி ஆறுமுகத்துடன் 012-2591632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளளாம்.