2018 சீபீல்டு கோயில் முதல் கலவரம் – 17 பேரும் விடுவிக்கப்பட்டனர்

2018 ஆம் ஆண்டு சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கலவரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேரை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவர்களை எந்த விசாரணையும் இன்றி விடுதலை செய்துள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் -Akmal Izzat Azi, Norul Ismawi Islahuddin, Hasneezam Shah Samsudin, Saifullah Abdullah, Riduan Sekh Ruslan, Irwan Noordin, Khairi Abdul Rashid, Rozaihan Zakaria, Qayyum Faisal, Ashraf Faizal, Absal Eastrie Abdullah, Jalil Talib, Khairol Anuar Zabidi, Zamri Said, Shukri Razali, Nor Azmi Abdul Ghani, and Shahril Danniel Sajeel.

24 முதல் 47 வயதுடையவ இவர்கள், 2018 நவம்பர் 26 அன்று அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடந்ததாகக் கூறப்படும் கலவரம் மற்றும் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்ததற்காக குற்றவியல்  சட்டத்தின் 148வது பிரிவின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சம்பவத்திற்குப் பிறகு, அப்போதைய உள்துறை அமைச்சர் முகைதின் யாசின், நிலத்தை வைத்திருக்கும் மேம்பாட்டாளாரால் நியமிக்கப்பட்ட   வழக்கறிஞர்களால் இந்தக் கூலிக் குழு வேலைக்கு அமர்த்தப்பட்டது என்று போலீசார் தீர்மானித்ததாகக் கூறினார்.

மாஜிஸ்திரேட் இஸ்கந்தர் ஜைனோல் இன்று தனது தீர்ப்பில், சம்பவம் தொடர்பாக முதன்மையான வழக்கை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றார்.

இந்த 17 பேரின் வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டபோது, ​​அதிகாலை நேரத்தில் சம்பவம் நடந்ததால், குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அரசு தரப்பு சாட்சிகள் அடையாளம் காணத் தவறியதாக நீதிமன்றம் கண்டறிந்ததாகக் கூறினார்.

சாட்சிகளால் நேர்மறையான அடையாளம் காணப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், வழக்கு விசாரணையின் போது அவர்களின் சாட்சியங்களும் நம்பகத்தன்மையற்றவை மற்றும் சீரற்றவை என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது என்றார்.

குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளபடி காட்சிப் பொருளாக நீதிமன்றத்தில் ஆயுதங்கள் ஏதும் வழங்கப்படவில்லை என்று கூறிய கீர்த்திராஜ், ஆயுதங்கள் சம்பவ இடத்திலிருந்து சாட்சிகளால் சேகரிக்கப்பட்டவை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து உண்மையில் கைப்பற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆயுதம் தொடர்பான தடயவியல் அறிக்கை எதுவும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லை என்றும், காவல்துறை விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் வழக்கறிஞர் மேலும் கூறினார்.

17 பேர் மீது 2018 டிசம்பரில் குற்றம் சாட்டப்பட்டது, அதை ஒட்டி அடுத்த ஆண்டில் 20 சாட்சிகளை கொண்டு வழக்கு விசாரணை தொடங்கியது.

இந்தச் சம்பவம் மற்றொரு கலவரத்தைத் தூண்டியது, இது தீயணைப்பு வீரர் முகமது அடிப் முகமது காசிமின் மரணத்திற்கு வழிவகுத்தது.

.