டாக்டர் மகாதீரும், முகைதினும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று எனக்குத் தெரியும் – அன்வார்

தனது போட்டியாளர்களான டாக்டர் மகாதீர் முகமது மற்றும் முகைதின் யாசின் ஆகியோர் தங்கள் நலன்களைப் பாதுகாக்க அணிசேர்வார்கள் என்று நான் எதிர்ப்பார்த்ததுதான் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

“புதிதாக எதுவும் இல்லை. இந்த குழு அவர்களின் வழிகளையும் நலன்களையும் பாதுகாக்க சதி செய்யும் என்று எங்களுக்கு தெரியும்.”

“தேசத்தையும் மக்களையும் காப்பாற்றுவது எங்கள் கடமை,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் மகாதீருக்கும் முகைதினுக்கும் இடையிலான சந்திப்பு குறித்து கேட்டபோது கூறினார்.

செவ்வாய் இரவு, இரண்டு முன்னாள் பிரதம மந்திரிகளும் “மலாய்க்காரர்களின் நிலை மற்றும் எதிர்காலம்” பற்றி விவாதிக்க சந்தித்தனர் என்று முகைதின் கூறினார்.

2020 ஆம் ஆண்டில் ஷெரட்டன் நகர்வுக்குப் பிறகு இருவரும் நடத்திய முதல் சந்திப்பு இரண்டு மணிநேரம் நீடித்ததாக நம்பப்படுகிறது, இது இறுதியில் மகாதீர் தலைமையிலான நிர்வாகத்தின் சரிவுக்கு வழிவகுத்தது, அவருக்குப் பதிலாக முகைதின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

முன்னதாக, முகைதின்மற்றும் மகாதீர் இருவரும் மலாய்க்காரர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்காக ஒருவரோடு ஒருவர் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகக் கூறினர்.

சந்திப்பின் போது, மகாதீர் “மலாய் ஒற்றுமையை வலுப்படுத்தவும், பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவை அதிகரிக்கவும்” ஒப்புக்கொண்டார், குறிப்பாக ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரவிருக்கும் ஆறு மாநில தேர்தல்களை எதிர்கொள்ள என்று நேற்று ஒரு அறிக்கையில், முகைதின் தெரிவித்தார்.

மகாதீரும் முகைதினும் பெர்சத்துவின் ஸ்தாபக உறுப்பினர்கள், ஆனால் மகாதீர் 2020 பிப்ரவரியில் அவர் பிரதம மந்திரி பதவியில் இருந்து விலகிய பிறகு கட்சியை விட்டு வெளியேறினார்.

 

-fmt