சிவில் சர்வீஸில் நிரந்தர பதவிகளுக்கான 15,000 காலியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட வேண்டும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Public Service Commission) தலைவர் ஜைனல் ரஹீம் செமான்(Zainal Rahim Seman) கூறினார்.
ஆண்டுக்குச் சராசரியாக 40,000 ஒப்பந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
துறைகள், அமைச்சகங்கள் மற்றும் முகமைகளின் தேவைகளைப் பொறுத்து காலியிடங்களின் எண்ணிக்கை மாறுபடும் என்று அவர் கூறினார்.
“காலியிடங்கள் துறைகள், அமைச்சகங்கள் மற்றும் முகமைகளுக்கு ஏற்ப மாறுபடும். அரசு ஊழியர்களின் ஓய்வு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நிரந்தர பதவிகளுக்குச் சராசரியாக 15,000 வரை மதிப்பிடப்பட்டுள்ளது”.
“ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25,000 முதல் 30,000 அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் கட்டத்தைக் கடந்து செல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது, குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் காலியிடங்களை நிரப்புகிறோம்,” என்று ஜைனல் இன்று நகர்ப்புற உருமாற்ற மையத்தில் (Urban Transformation Centre) ஜொகூர் பாரு SPA நேர்காணல் மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்தபின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“புதிய பதவிகளுக்கு, அது அந்தந்த அமைச்சகங்களின் இலாகாவைப் பொறுத்தது. உதாரணமாக, ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தரப் பதவிகளுக்கு நியமிப்பது போன்ற பிரச்சினைகள் காரணமாகச் சில அமைச்சகங்களுக்கு புதிய பதவிகள் தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் திட்டமிடும் அமைச்சகத்தைப் பொறுத்தது,” என்று அவர் மேலும் கூறினார்.
ஜொகூர் பாரு SPA நேர்காணல் மையம் UTCயில் அமைந்துள்ள ஆறாவது வசதியாகும், மற்றவை ஈப்போ, ஜார்ஜ் டவுன், கங்கார், மிரி மற்றும் குச்சிங் ஆகிய இடங்களில் உள்ளன.
ஆறு நேர்காணல் அறைகளைக் கொண்ட ஜொகூர் பாரு மையம், ஆண்டு முழுவதும் நேர்காணலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்களைப் பெற்ற ஒன்றாகும் என்று அவர் கூறினார்.