முன்மொழியப்பட்ட பெட்டாலிங் ஜெயா இணைப்பு (PJD Link) நெடுஞ்சாலையை ரத்து செய்யச் சிலாங்கூர் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சமர்ப்பித்த திட்டத்தில், குறிப்பாகச் சமூக தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் நிர்வாகம் திருப்தியடையாததே இதற்குக் காரணம் என்று காப்பாளர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
“சமர்ப்பிக்கப்பட்ட தாக்க மதிப்பீட்டு அறிக்கையைப் பொறுத்தவரை, குறிப்பாகச் சமூக தாக்க அறிக்கையின் அடிப்படையில், இந்த நிர்வாகம் மாநில அரசு விதித்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாததால் இந்தத் திட்டம்மீது அதிருப்தி அடைந்துள்ளது”.
“எனவே, சிலாங்கூர் அரசாங்கம் இந்தத் திட்டத்தைத் தொடர விரும்பவில்லை, மேலும் PJD இணைப்பிற்கான கட்டுமான விண்ணப்பத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
ஏப்ரல் 2022 இல் மத்திய அரசுக்கும் டெவலப்பருக்கும் இடையே சலுகை ஒப்பந்தம் கையெழுத்தானாலும், டெவலப்பர் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA), சமூக தாக்க மதிப்பீடு (SIA) மற்றும் போக்குவரத்து பாதிப்பு மதிப்பீடு (TIA) ஆகியவற்றை நடத்த வேண்டும் என்று மாநில அரசு கூறியது.
“இந்த நிர்வாகத்தின் கொள்கைகள் சிலாங்கூர் மக்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு சமநிலையை சிலாங்கூரில் உருவாக்க முடியும்,” என்று அமிருதின் மேலும் கூறினார்.