மிகப் பெரிய பலப்பரீட்சை: மிதவாதமா? தீவிரவாதமா?

இராகவன் கருப்பையா- ஆறு மாநிலங்களில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்கள் நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொரு இடத்தை பிடித்துள்ளது என்பதில் ஐயமில்லை.
கிளந்தான், திரங்கானு, ஆகிய கிழக்குக் கரை மாநிலங்களை மட்டுமே ஆக்கிரமித்து, காலங்காலமாக ஒரு சாதாரண கிராமப்புற கட்சியாக பின் தங்கிக் கிடந்த பாஸ், தற்போது நாட்டையே கைப்பற்றும் அளவுக்கு துரித வளர்ச்சி கண்டுள்ளதுதான் அதற்கான காரணமாகும்.
தொடக்க காலத்தில் இருந்தே அக்கட்சி மதவாதத்தை முன்னிறுத்தி நகர்ப்புறங்களுக்கு வெளியே உள்ள பாமர மக்களை சுலபத்தில் தன் வசம் ஈர்த்து அரசியல் நடத்தி வந்ததும் நாம் அறிந்ததே.
ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அக்கட்சி அடைந்த மகத்தான வெற்றி நாட்டின் அரசியல் இலக்கை புரட்டிப் போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அதிர்ஷ்ட குலுக்கில் கிடைத்த ‘ஜேக்போட்’டை போல அவர்களுடைய காலில் வந்து விழுந்த அவ்வெற்றியை அநேகமாக அக்கட்சியினரே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
அதனை ஒரு உத்வேகமாக உருமாற்றி, இனவாதமும் மதவாதமும் கலந்த ஒருவகை தீவிரவாதம்தான் நாட்டின் ஆட்சியை கைப்பற்ற சலபமான வழி எனும் இலக்கை தற்போது வகுத்துக் கொண்டு, வெறித்தனமான இனத்துவேசக் கருத்துகளையும் மத சார்பான விஷமங்களையும் நாடுதழுவிய நிலையில் பெருமளவில் கட்டவிழ்த்து தங்களுடைய பலத்தை அவர்கள் மேலும் வலுப்படுத்தியுள்ளனர்.
இதில் வியக்கதக்க ஒரு விஷயம் என்னவென்றால் நகர் புறங்களில் உள்ள மலாய்க்காரர்களும் உயர் கல்வி பெற்றவர்களும் கூட தற்போது சன்னம் சன்னமாக அக்கட்சிக்கு ஆதரவளிக்கத் தொடங்கிவிட்டனர். இந்தத் தரப்பினரையும் தங்களுடைய விஷக் கருத்துகளின் வழி ஈர்த்துவிடலாம் என அக்கட்சியே எதிர்பார்த்திருக்காது. ஆனால் அதுதான் தற்போதைய யதார்த்தம்.
இப்படி தீவிரவாதத்தை நோக்கி நாடு நகர்ந்நு கொண்டிருக்கும் நிலையில் அனைத்து இனங்களையும் அனுசரித்து நாட்டை தற்போது ஆட்சி செய்யும் பிரதமர் அன்வாருக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு குறைந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.
அம்னோவுக்கான மலாய்க்காரர்களின் ஆதரவும் சரிந்துள்ளதால் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு அது மிகப் பெரிய சவாலை ஏற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் மலாய்க்காரர் அல்லாதாரின் ஒட்டு மொத்த ஆதரவையும் திரட்ட வேண்டிய கட்டாயத்திற்கு அன்வார் தள்ளப்பட்டுள்ளார்.
அதே வேளையில் ஆனால் ஜ செ.க. செய்த சில குளருபடியான முடிவுகள் அன்வாரின் முயற்சிகளுக்கு சவாலாக உள்ளன.
பினேங் மாநிலத்தில், பராமரிப்பு அரசாங்கத்தின் துணை முதல்வர் இராமசாமியும் அவருடைய தீவிர ஆதரவாளர்களும் முற்றாக களையெடுக்கப்பட்டுள்ள சம்பவம் எவ்வகை பாதிப்பை  ஏற்படுத்தும் என்பது நாளை தெரியும்.
ஆக வெறித்தனமான தீவிரவாதத்தை நோக்கிச் செல்லும் நம் நாட்டை அன்வாரின் மிதவாதம் காப்பாற்றுமா?