வெள்ளப் பிரச்சினை மீது கவனம் செலுத்தப்படும்-  பாப்பாராய்டு

இராகவன் கருப்பையா – பந்திங் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதே தனது தலையாயக் கடமை என்று கூறுகிறார் அத்தொகுதிக்கு புதிய சட்டமன்ற உறுப்பினராக தேர்வுபெற்றுள்ள வி.பாப்பாராய்டு.

குறிப்பாக ஜெஞ்ஜாரோம் வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் நீண்ட நாள்களாக வெள்ளத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அதற்கு உடனடித் தீர்வு காணப்படுவது அவசியம் என்றும் சிறப்பு நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

“வெள்ளத்தில் பாதிக்கப்படுபவர்கள் எவ்வாறான இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் கடந்த 2021ஆம் ஆண்டு பிற்பகுதியில் சிலாங்கூர், ஷா அலாமில் உள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் என் வீடும் ஒன்று. அப்பகுதியில் கிட்டதட்ட எல்லா வீடுகளுமே சுமார் 10 அடி நீரில் முழ்கியது நாடறியும். அப்படிப்பட்ட ஒரு கொடுமை இனி யாருக்கும் ஏற்படக் கூடாது” என்று கூறுகிறார் பாப்பாராய்டு.

கிளேங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினருமான வி.கணபதிராவின் இளைய சகோதரரான 48 வயது பாப்பாராய்டு கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார்.

பேராக், தெலுக் இந்தானில் 8 பேர் கொண்ட குடும்பத்தில் கடைசியாகப் பிறந்த அவர், சிதம்பரம் பிள்ளை தமிழ் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியையும் செயிண்ட் அந்தோனி இடைநிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவம் வரையிலும் கல்வியைத் தொடர்ந்தார்.

அரசியல் அறிவியல் துரையில் பட்டம் பெற்றுள்ள பாப்பாராய்டுவுக்கு மனைவி மகேஸ்வரியும் 7 வயதிலிருந்து 23 வயது வரையில் 2 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.

தற்போது பந்திங் நகரின் நுழைவாயிலோடு நிறைவு பெறும் இலகு ரயில் சேவையை நீட்டிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளப் போவதாக குறிப்பிட்ட அவர், இதன் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லொக்கை விரைவில் சந்திக்கவிருப்பதாகக் கூறினார்.

ஜெஞ்ஜாரோம், சுங்ஙை சீடு, பந்திங் மற்றும் தஞ்சோங் செப்பாட் வழியாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வரையில் அச்சேவை நீட்டிக்கப்பட்டால் அப்பகுதிகளில் உள்ள எல்லா நகரங்களும் துரித வளர்ச்சியடையும் என்றார் அவர்.

தனது தொகுதியில் ஏழ்மையில் வாழும் மக்களின் துயரங்களை துடைத்தொழிப்பதற்கும் பல திட்டங்களை தாம் வகுக்கவிருப்பதாக பாப்பாராய்டு குறிப்பிட்டார்.

அவர்கள் சிறு தொழில்களை தொடக்குவதற்கான முன்னெடுப்பும் அவற்றுள் ஒன்று என்று கூறிய அவர் அதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

நகர மையங்களில் சாலை போக்குவரத்து நெரிசலும் நீண்டநாள்களாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கும் விரைவில் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய பாப்பாராய்டு தனது தொகுதியில் எஸ்.பி.எம். தேர்வில் குறைந்த பட்சம் 10ஏ பெறும் மாணவர்களுக்கும் அரசு மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் தலா 200 ரிங்கிட் கல்வி உதவி நிதி வழங்கப்படும் என்றார்.

ஏறத்தாழ கடந்த 25 ஆண்டுகளாக இத்தொகுதியில் சீனர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து வந்திருக்கின்றனர். இரண்டு தவனைகள் ம.சீ.ச.வைச் சேர்ந்தவர்களும் 3 தவனைகள் ஜ.செ.க.வின் சீன பிரதிநிதிகளும் இங்கு சேவையாற்றியுள்ளனர்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு முதல் இந்தியப் பிரதிநிதியாக பந்திங் தொகுதியில் வெற்றிபெற்ற பாப்பாராய்டு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் நியமனம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.