முன்னாள் அமைச்சரின் முன்னாள் அரசியல் செயலாளர் MACC ஆல் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களில் ஒருவருர், ரிம 80 மில்லியன் அமைச்சகத் திட்டத்திற்காகக் கோரிக்கை விடுத்து பணம் கோருதல் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வரவழைக்கப்பட்ட இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
பெரிட்டா ஹரியன் அளித்த தகவலின்படி, ரிம 80 மில்லியன் திட்டம் நேரடி பேச்சுவார்த்தைகளின் மூலம் செய்யப்பட்டது.
“முதல் சந்தேக நபர் தனது இருபது வயதுகளில் முன்னாள் மூத்த அமைச்சரின் அரசியல் செயலாளராகவும், இரண்டாவது சந்தேக நபர் வர்த்தக உரிமையாளர் ஆவார்”.
“நேரடி டெண்டர் மூலம் புத்தக அச்சிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்காக ஒப்பந்ததாரரிடமிருந்து இரண்டாவது சந்தேக நபரின் நிறுவனம்மூலம் லஞ்சம் கோருவதில் மற்றும் பெறுவதில் அவர்கள் முன்னாள் மூத்த அமைச்சருடன் இணைந்து செயல்படுவதாக நம்பப்படுகிறது,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
MACC துணை தலைமை ஆணையர் அஹ்மத் குசைரி யஹாயா கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.
MACC சட்டம் 2009ன் பிரிவு 16(a)(B) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்றார்.
நான்கு நாட்கள் காவலில் வைக்கப்படுவர்
இரண்டு நபர்களையும் இன்று தொடங்கி செப்டம்பர் 26 வரை நான்கு நாட்களுக்குக் காவலில் வைக்கப் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நூர் அடிலா ஹாலிடிடமிருந்து நீதிமன்றத்தின் உத்தரவை MACC பெற்றுள்ளது.
அந்த நபர் எந்த மூத்த அமைச்சருக்காகப் பணிபுரிந்தார் என்பது தெரிவிக்கப்படாத நிலையில், பாலர் பள்ளிகளுக்கான J-Qaf புத்தகங்களை அச்சடித்தது தொடர்பாக அவரது முன்னாள் அரசியல் செயலாளர் தான் கைது செய்யப்பட்டார் என்று முன்னாள் கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் ஒப்புக்கொண்டார்.
ஊழல் வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாகச் சமூக ஊடகங்களில் வைரலான பதிவுகள் உள்ளன என்று ராட்ஸி கூறினார்.
புத்தகங்கள் அச்சிடுவதிலும் குறிப்பிடப்பட்ட நிறுவனத்திலும் தனக்கும் அவரது மனைவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.
“பாலர் பள்ளிகளுக்கான J-Qaf புத்தகங்களை அச்சிடுவது தொடர்பாக என்னையும் எனது மனைவியையும் இணைக்கும் வைரல் செய்திகளில் உள்ள குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்”.
ராட்ஸி, நேரடியாகவோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ யாரிடமிருந்தும் எந்த லஞ்சமும் கோரவில்லை அல்லது பெறவில்லை என்றும் கூறினார்.
மாறாக, MACC மேலிடத்தின் உத்தரவுகளின்படி செயல்படுவதாகவும், வைரல் செய்திகள் அவரது நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“இந்தத் தீங்கிழைக்கும் மற்றும் ஆதாரமற்ற அவதூறுகளை மீண்டும் அல்லது மறுபிரசுரம் செய்யும் எவருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன்,” என்று அவர் கூறினார்.