இராகவன் கருப்பையா – லங்காவி தீவில் அமைந்துள்ள ஒரே தமிழ் பள்ளியான சுங்கை ராயா தோட்டத் தமிழ் பள்ளி நம் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது.
கடந்த 1935ஆம் ஆண்டில் தோற்றம் கண்ட இப்பள்ளியில் தற்போது 120 மாணவர்கள் பயில்கிறார்கள். அவர்களில் கிட்டதட்ட எல்லா மாணவர்களுமே ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்குவதாக அதன் தலைமையாசிரியர் வடிவேலு கூறினார்.
லங்காவி தீவின் மொத்த மக்கள் தொகையான 99,000 பேரில் ஏறத்தாழ 4000 பேர் இந்தியர்களாவர். இவர்களில் பெரும்பகுதியினர் சுற்றுப் பயணத்துறையிலும் ஹோட்டல் துறைகளிலும் உள்ளனர்.
இப்பள்ளி அமைந்துள்ள சுங்கை ராயா தோட்டத்தில் வசித்தவர்களில் பெரும்பகுதியினர் வேறு இடங்களுக்கு மாற்றலாகி சென்றுள்ள நிலையில் அங்கு சுமார் 10 குடும்பங்கள் மட்டுமே இன்னமும் உள்ளனர்.
இருப்பினும் மொத்தம் 13 ஆசிரியர்களைக் கொண்ட இப்பள்ளியின் அடைவு நிலை சிறப்பாக உள்ளதால் லங்காவித் தீவின் பல்வேறு இடங்களிலிருந்து பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை இப்பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
தேசிய நிலையில் பல புத்தாக்கப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இப்பள்ளி, கடந்த ஆண்டுக்கான ‘சிறந்த கருவள மையத்தைக் கொண்ட பள்ளி’யாகவும் தேர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
தேசிய ரீதியில் 150கும் குறைவான எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப நிலைப் பள்ளிகளின் பிரிவில் கல்வி அமைச்சின் ‘சிறந்த கருவள மையத்திற்கான முதல் பரிசினை இந்த சுங்கை ராயா தமிழ் பள்ளி தட்டிச் சென்றது.
இப்பள்ளியின் பழைய மாணவர்களில் நிறைய பேர் தற்போது நாடு தழுவிய நிலையில் மருத்துவர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் கணக்காய்வாளர்களாவும் பொறியியலாளர்களாகவும் தொழிலதிபர்களாகவும் கூட இருப்பதாக வடிவேலு பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கம், வாரியக் குழு உறுப்பினர்கள், லங்காவி மாவட்ட கல்வி அதிகாரிகள், கெடா மாநில கல்வி அதிகாரிகள், மற்றும் இதர ஆசிரியர்களின் ஆதரவோடு, பள்ளியின் கருவள பொறுப்பாசிரியை ஜெயராணி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக வடிவேலு மேலும் கூறினார்.
இதன் வழி பள்ளியின் அடைவு நிலையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல தாங்கள் திட்டமிட்டுள்ளதாக வடிவேலு உற்சாகத்தோடு விவரித்தார்.