இராகவன் கருப்பையா- மலேசிய தமிழ் பத்திரிகை உலகின் தனிப்பெரும் வேந்தனாக வாழ்ந்து மறைந்த அமரர் ஆதி.குமணனின் எழுத்துலக வரலாற்றை சித்தரிக்கும் நூல் ஒன்று தலைநகரில் வெளியீடு காணவிருக்கிறது.
நம் நாட்டு தமிழ் பத்திரிகைத் துறையை புதிய பரிணாமத்திற்கு இட்டுச் சென்றது மட்டுமின்றி அதன் வழி சமுதாய அச்சாணியாகவும் விளங்கிய அவரைப்பற்றிய விரிவான தெளிவான விளக்கங்களை உள்ளடக்கிய இந்நூலை பிரபல புகைப்படக் கலைஞர் மலையாண்டி எழுதியுள்ளார்.
எதிர்வரும் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தலைநகர் விஸ்மா துன் சம்பந்தனில் உள்ள சோமா அரங்கில் மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தலைமையில் இப்புத்தகம் வெளியிடப்படும்.
ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் பத்திரிகை துறையில் தலைச்சிறந்த புகைப்படக் கலைஞராக விளங்கும் மலையாண்டி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இதற்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
ஆதி குமணனோடு பணியாற்றிய காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமின்றி அதற்குப் பிறகும் அவர் தொடர்பான ஆவணங்களை சேகரித்து இப்புத்தகத்தில் உள்ளடக்கம் செய்துள்ளார்.
இலக்கியம், அரசியல், மருத்துவத்துறை, சமூகவியல், ஆன்மிகம், பத்திரிகைத் துறை, விளையாட்டுத்துறை மற்றும் சட்டத்துறை, முலியவற்றைச் சார்ந்த ஏராளமான பேர், ஆதி. குமணனைப் பற்றி வெளியிட்ட கருத்துகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமின்றி ஆதி.குமணனின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்தம் பத்திரிகைத் துறை போராட்டங்களையும் இந்நூல் உள்ளடக்கி இருக்கிறது என்று மலையாண்டி கூறினார்.
ஆரம்பக் கல்வியையும் பட்டப் படிப்பையும் தமிழ் நாட்டில் பெற்ற ஆதி. குமணன், புகழ்பெற்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பட்டம்பெற்றார்.
1970-களின் தொடக்கத்தில் பத்திரிகை துறையில் கால் பதித்த அவர் பின்னர் தமிழ் ஓசை நாளேட்டை வழிநடத்தி, அதன் பின் மலேசிய நண்பன் நாளிதழை தன் வாழ்நாளின் இறுதி வரையில் வெற்றிகரமாக நிர்வகித்தார்.
இந்த காலக் கட்டத்தில், மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொண்ட, குறிப்பாக தமிழர்கள் சந்தித்த பல்வேறு அரசியல், பொருளாதார, சமூக, கல்வி, ஆன்மிக பிரச்சினைகளுக்காக தன் பேனாமுனைவழி குரல் கொடுத்தார் அவர்.
இதனால், அவர் எதிர்கொண்ட போராட்டங்களும் வழக்குகளும் அதிகம் என்பதை மலேசியத் தமிழர்கள், குறிப்பாக தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். இவை யாவும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
ஒரு சாதாரண பத்திரிகையாளரும் பத்திரிகை முதலாளியாக உருவெடுக்க முடியும் என்பதை உலகுக்கு ஆதி.குமணன் எடுத்துக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.