தொகுதியின் நலனுக்காக அன்வாருக்கு ஆதரவை தெரிவித்த பெர்சத்து எம்.பி

பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமைக்கு ஆதரவு அளிக்க கோலா கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலிட் முடிவு செய்துள்ளார்.

தனது தொகுதியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வு காண வேண்டிய அவசர தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பெர்சத்து எம்.பி. தெரிவித்துள்ளார்.

“நாட்டின் செழிப்பு மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த பிரதமரின் எந்தவொரு முயற்சிக்கும் நான் ஆதரவளிக்கிறேன், ”என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எந்த சூழ்நிலையிலும் பெர்சத்துவை விட்டு வெளியேறவோ அல்லது காட்டிக் கொடுக்கவோ மாட்டேன் என்று கூறிய இஸ்கந்தர் துல்கர்னைன், தான் இன்னும் தனது கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாக கூறினார்

பெர்சத்துவால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு ஆளாக நேரிடலாம் என்றாலும், அரசியல் பூசல்கள் காரணமாக தனது பகுதியில் உள்ள வாக்காளர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்குவதை பார்க்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

“அடுத்த பொதுத் தேர்தல் வரை மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க நான் முடிவு செய்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் இஸ்கந்தர் துல்கர்னியன் 14,380 வாக்குகள் பெற்று குவாலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார், மற்ற வேட்பாளர்களான பாரிசான் நேசனலின் மஸ்லின் ஷாம் ரஸ்மான் (10,814 வாக்குகள்), பக்காத்தான் ஹராப்பானின் அஹ்மத் டெர்மிசி ரம்லி (10,356 வாக்குகள்) மற்றும் ஏர்மாலி (40 வாக்குகள்) பெற்றனர்.

இஸ்கந்தர் துல்கர்னைன் முன்பு பேரா முன்னாள் மந்திரி பெசார் அகமது பைசல் அசுமுவின் அரசியல் செயலாளராக பணியாற்றினார்.

 

-fmt