மூத்த குடிமக்களுக்கு மலாய் தெரியாதென்றால் குடியுரிமை கிடைக்காதா?

இராகவன் கருப்பையா – குடியுரிமைக்காக காத்திருக்கும் மூத்த குடிமக்களில் நிறைய பேருக்கு மலாய் மொழியில் ஆற்றல் இல்லாததால் அவர்களுடைய விண்ணப்பங்களை பரிசீலிக்க இயலவிலை என உள்துறை அமைச்சர் சைஃபுடின் கூறியது ஏற்புடையதாக இல்லை.

ஒற்றுமை அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த 10 மாதங்களில் மொத்தம் 10,381 பேரின் குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் செய்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்த எண்ணிக்கையில் பெரும்பகுதியினர் சிறுவர்கள் என்றும் குடியுரிமை இல்லையென்றால் பள்ளிக்கு செல்ல முடியாது என்பது மட்டுமின்றி அரசாங்க மருத்துவமனைகளில் அவர்கள் இலவசமாக சிகிச்சை பெற இயலாது என்பதாலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது என நாடாளுமன்றத்தில் சைஃபுடின் தெரிவித்தார்.

அதெல்லாம் சரிதான். ஆனால் மலாய் மொழியில் பாண்டியத்துவம் இல்லை என்று காரணம் காட்டி முதியோர்களை உதாசினப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

இந்த நடைமுறை புதிதான ஒன்றல்ல என்பது யாவரும் அறிந்ததுதான். இது காலங்காலமாக நம் நாட்டில் நடப்பில் உள்ள ஒரு விதிமுறை. மற்ற நாடுகளிலும் இத்தகைய நிலைப்பாடுதான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் இந்த ஒரு விதிமுறையை முன் வைத்து மூத்த குடிமக்களை அனாவசியமாக தண்டிக்கக் கூடாது. இளைய வயதினருக்கு அதன் அமலாக்கம் நியாயமான ஒன்றுதான் – ஆனால் முதியோருக்கு அது ஏற்புடையதாக இல்லை.

அவர்களில் பெரும்பகுதியினர், குறிப்பாக இந்தியர்கள் பல்லாண்டுகளாக தோட்டப்புறங்களில் வசித்தவர்களாக இருக்கக் கூடும். வாழ்நாளில் அவர்கள் மலாய் மொழியை துளியளவும் பேசக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம்.

குடியுரிமைக்காக அவர்களை இப்போது மலாய் மொழி ‘டியூஷன்’ வகுப்புகளுக்கா அனுப்ப முடியும்? இதெல்லாம் நடைமுறைக்கு அப்பாற்பட்ட விஷயங்களாக அல்லவா உள்ளன!

முதியோருக்கு மட்டும் விதிமுறைகளில் கொஞ்சம் தளர்வு ஏற்படுத்தி அவர்களுடைய விண்ணப்பங்களை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலனை செய்தால் அரசாங்கத்திற்கு எவ்வகையில் நஷ்டம் ஏற்படும்? ஏன் இதனை கருத்தில் கொள்ளக் கூடாது?

குறைந்த பட்சம் தங்களுடைய அந்திம காலத்தில் நாட்டின் குடிமக்கள் எனும் நிலையில் மகிழ்ச்சியாக அவர்கள் நாள்களை கழிக்க இது வகை செய்யும் அல்லவா!

பிறப்பு பத்திரம் மற்றும் அடையாள அட்டை போன்ற தஸ்தாவேஜுக்கள் இல்லாததால் நம் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் பல்வேறு இன்னல்களை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர்.

சைஃபுடின் வெளியிட்ட புள்ளி விவரத்தில் எத்தனை பேர் இந்தியர்கள் என்று தெரியவில்லை. இருந்த போதிலும் புதிய அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு சராசரி 1000 பேருக்கு மேல் குடியுரிமை வழங்குவது பாராட்டத்தக்கது.

எனினும் மூத்த குடிமக்களுக்கு விசேஷ சலுகைளை வழங்கி அவர்களுக்கு பரிவு காட்டினால் அரசாங்கத்தின் முன்னெடுப்பு நிறைவானதாக அமையும் என்பதில் ஐயமில்லை.