தென்னாப்ரிக்கர்கள், சிங்கப்பூரியர்கள் போல் அல்லாது வெளிநாடுவாழ் மலேசியர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.
இதனை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த வழக்குரைஞர் எட்மண்ட் போன்(இடம்), வெளிநாடுகளில் உள்ள குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்காத ஒரு சில காமன்வெல்த் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்றார்.
“என் கட்சிக்காரர்கள் தொகுதியில் இல்லா வாக்காளர்கள் என வகைப்படுத்தப்படவில்லை. இது சமத்துவத்தை வலியுறுத்தும் அரசமைப்பின் பகுதி 8, வாக்களிக்கும் உரிமை வழங்கும் பகுதி 119 ஆகியவற்றை மீறும் செயலாகும்”, என்றாரவர்.
எட்மண்ட் போன், வெளிநாடுகளில் வாழும் தங்களைத் ‘தொகுதியில் இல்லா வாக்காளர்களாக’ பதிவு செய்யும் உரிமை கேட்டு வழக்குத் தொடுத்துள்ள ஆறு மலேசியர்களைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் ஆவார்.
தியோ ஹூன் சியோங், வி.வினேஷ், பரம்ஜிட் சிங், யோலாண்டா சிட்னி ஆகஸ்டின், சிம் ட்சு வை, லியோங் சீ வீ ஆகியோரே அந்த அறுவருமாவர்.
அரசுத்தரப்பு வழக்குரைஞர் அமர்ஜிட் சிங், தேர்தல்களை நடத்துவதும் தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதும் இசி-இன் பொறுப்பாகும் என்றார். விண்ணப்பத்தாரர்களான அறுவரும் தொகுதியில் இல்லா வாக்காளர்கள் எனப் பதிவுசெய்துகொள்ள தகுதி பெறவில்லை என்றாரவர்.
வெளிநாடுகளில் தனியார் துறையில் வேலை செய்துகொண்டு அங்கேயே வாழ்ந்துவரும் மலேசியக் குடிமக்கள், தங்களை வாக்காளர்களாக பதிந்துகொள்ள 2002 தேர்தல் விதிமுறைகள் இடம்தரவில்லை.
நடப்பு நிலையில் வேலை நிமித்தம் வெளிநாடுகளில் உள்ள அரசு ஊழியர்கள் அல்லது ஆயுதப் படைகளைச் சேர்ந்தவர்கள் அல்லது வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமே தொகுதியில் இல்லா வாக்காளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் நீதிபதி ரொஹானா யூசுப் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிப்பார்.
அத்தீர்ப்பு வெளிநாடுகளில் தங்கி வேலை செய்துவரும் சுமார் 700,000 மலேசியரின் வாக்குரிமையை முடிவு செய்யும். அது, எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தலாம்.