இராகவன் கருப்பையா- அரசாங்கத்துடனான தொடர்புகள் இனிமேல் மலாய் மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என பிரதமர் அன்வார் சில தினங்களுக்கு முன் செய்த அதிரடி அறிவிப்பு நாடு தழுவிய நிலையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களால் தேர்வு செய்யபப்டும் பிரதமரும் அவருக்கு ஆதரவு நல்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்களுக்கான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.
அன்வார் தன்னிச்சையாக இந்த ஒரு முடிவை திணிக்க நினைப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அவர் ஒரு மக்களின் பிரதமர் என்ற முத்திரையை அவர் மறந்தது வியப்பாக உள்ளது.
அரசு மொழி மலாய் என்பதால், அரசுக்கு அனுப்பும் கடிதங்கள் மலாய் மொழியில்தான் இருக்க வேண்டும் என்பது சரியாகும்.
ஆனால், கடிதங்கள் ஆங்கிலம், சீனம், தமிழ் அல்லது ஜாவி மொழிகளில் வந்தால் கூட அரசாங்கம் அவற்றை முடிந்த அளவு முயற்சிகள் எடுத்து பரிசீலிக்க வேண்டும். அதுதான் அதன் கடமை.
ஆங்கிலம் உள்பட வேறு எந்த மொழியில் கடிதங்கள் வந்தாலும் அவை திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற அவருடைய உத்தரவை தேவையற்றது.
அவைகளுக்கு தகுந்த தேவைபடும் பதிலை அரசு அனுப்புவது மலாய் மொழியில் இருக்க வேண்டிம், அல்லது சில சூழலில் ஆங்கில மொழியிலும் இருக்கலாம்.
அரசு நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளும் அனைத்து தொழில் நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் மலாய் மொழியில்தான் கடிதங்களை எழுத வேண்டும் என அவர் ஆணை பிரபித்துள்ள்து ஒரு பின்னடைவாகும்.
மலாய் மொழி தேசிய மொழி எனும் வகையில் பள்ளிப் பிள்ளைகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் வெகு சிறப்பாகவே அதனை பயின்று அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்றனர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான்.
அது மட்டுமின்றி அரசாங்க அலுவல்களை, குறிப்பாக எளிய மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பல சேவைகளை இது சுணக்கமடையச் செய்யக் கூடும்.
சில இலாகாக்கள் சுறுசுறுப்பாக இயங்காமல் மந்தமாக கிடக்கின்றன என ஏற்கெனவே அவப் பெயரை சுமந்து நிற்கும் வேளையில் இப்புதிய உத்தரவினால் நிலைமை மேலும் மோசமானாலும் வியப்பில்லை.மலாய் மொழி பயனீட்டில் ஆங்கில சொற்களின் கலப்பு நிறையவே உள்ளன. உதாரணத்திற்கு ‘situasi'(ஆங்: situation), ‘aktiviti'(ஆங்: activity), ‘komplikasi'(ஆங்: complication), ‘demokrasi'(ஆங்:democracy), ‘dedikasi'(ஆங்: dedication), ‘komitmen'(ஆங்: commitment), இப்படியாக நூற்றுக்கணக்கான மலாய் வார்த்தைகள் ஆங்கிலத்திலிருந்து அதிகாரப்பூர்மற்ற வகையில் கலவை செய்யப்பட்டவைதான்.
ஆக இப்படிப்பட்ட வார்த்தைகள் பெருமளவில் கலந்துள்ள கடிதமொன்றை ஒரு அரசு ஊழியர் எப்படி பார்ப்பார் என்று தெரியாது.
பிரதமரின் உத்தரவில் தெளிவானதொரு விளக்கம் இல்லாத பட்சத்தில் பொதுவாகவே பல்லின பண்பாடு வழி ஒரு வளமான சமூக சிந்தனையையும் முற்போக்கான முனெடுப்புகளையும் அன்வார் எடுப்பார் என்ற எதிர்ப்பார்புக்கு இந்த அவரின் நிலைபாடு ஏமாற்றம் அளிக்கிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டோ என்னவோ சரவாக் மாநில அரசாங்கம் இந்த விதிமுறையை ஏற்கப் போவதில்லை என்றும் ஆங்கிலத்தில் வரும் கடிதங்களுக்கு எவ்வித தடையும் இருக்காது எனவும் அறிவித்துள்ளது.
ஆக பொது மக்களுக்கு ஆக்ககரமான சேவைகளை வழங்க உறுதியளித்திருக்கும் அன்வாரின ‘மடானி’ அரசாங்கம் இதுபோன்ற விசயங்களில ஆழமான கவனம் செலுத்தி அரசாங்கத்துடனான தொடர்புகளை சுமூகப்படுத்துவது அவசியமாகும்.
அன்வார் இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்வதுதான் பல்லின மற்றும் பன்மொழி மக்களின் உணர்வை மதிக்கும் பிரதமர் என்ற அந்தஸ்த்தை அவருக்கு உறுதி செய்யும்.