பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளிப்பதற்கு ஈடாகத் தங்களுக்கு பதவிகளும் திட்டங்களும் வழங்கப்படுதாக இரண்டு பெரிகத்தான் நேசனல் சட்டமியற்றுபவர்கள் கூறினர்.
குபாங் பாசு எம்பி கு அப்துல் ரஹ்மான் கு இஸ்மாயில் மற்றும் பெசுட் எம்பி சே முகமட் சுல்கிஃப்லி ஜூசோ ஆகியோர் இன்று PN தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது இதை வெளிப்படுத்தினர்.
கு அப்துல் ரஹ்மான் (மேலே, இடது புறம்) தனது தொகுதியில் ஒரு ஹோட்டல் கட்டுவதற்கான வாய்ப்பைக் கொண்டு வாட்ஸ்அப் மூலம் பெயரிடப்படாத நபர் தன்னைத் தொடர்பு கொண்டதாகக் கூறினார்.
“எனக்கு ஒருவரிடமிருந்து ஒரு செய்தி வந்தது; அவர் எங்கள் பின்னணி மற்றும் எனது தொகுதியை ஆய்வு செய்துள்ளார்”.
“தாருலமன் கோல்ஃப் கிளப்பின் பின்புறத்தில் எனது பகுதியில் ஒரு பூட்டிக் ஹோட்டலைத் திறக்க அவர் முன்மொழிந்தார். உடனே அவரின் தொடர்பை முடக்கினேன்,” என்றார்.
ரிசால் ஆதம் என்ற பெயரால் ஒரு ‘டத்தோ’ தன்னைத் தொடர்பு கொண்டதாகச் சே முகமட் (மேலே) கூறினார்.
அந்தத் தொகுதியில் 40 அறைகள் கொண்ட ஹோட்டலை முன்மொழிந்து பெசுட் எம்பிக்கு அந்த நபர் மின்னஞ்சல் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
“பெசுட்டில் நீச்சல் குளம் மற்றும் சில்லறை பல்பொருள் அங்காடியுடன் கூடிய 40 அறைகள் கொண்ட ஹோட்டலின் முன்மொழியப்பட்ட மேம்பாட்டிற்காக, ‘டத்தோ’ ரிசல் ஆதாமிடமிருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது,” என்று அவர் கூறினார்.
தசெக் கெலுகோர் எம்.பி. வான் சைபுல் வான் ஜான் அவர்கள் கட்சியை விட்டு வெளியேறியதற்கு ஈடாக எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு வெகுமதியாகக் கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறியது குறித்து கருத்து கேட்டபோது இரு சட்டமியற்றுபவர்களும் இவ்வாறு தெரிவித்தனர்.
ஹோட்டல்களை உருவாக்குவதைத் தவிர, அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனத்தை (GLC) அல்லது மிளகாய்ச் செடி திட்டத்தை வழிநடத்துவதற்கான அழைப்பையும் இந்தச் சலுகைகள் உள்ளடக்கியிருந்தது.
தனித்தனியாக, PN இன் தலைமையாளர் தகியுதீன் ஹாசன், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சமமான ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்துடன் எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறினார்.
பேச்சுவார்த்தைகளைக் கையாளும் பொறுப்பில் உள்ள துணைப் பிரதமர் ஃபதில்லா யூசோப், எதிர்க்கட்சிகள் சில உத்தரவாதங்களுடன் அரசாங்கத்திற்கு கடிதம் எழுத வேண்டும் என்று கோரியதாகத் தகியுதீன் குற்றம் சாட்டினார்.
கோத்தா பாரு எம்.பி எந்த உத்தரவாதங்கள் அல்லது அரசாங்கத்தால் என்ன பொறுப்புகள் கோரப்பட்டன என்பதை விவரிக்கவில்லை.
“(முன்னாள் பிரதமர்) இஸ்மாயில் சப்ரி யாகோப் காலத்தில், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்க்கட்சிகளுக்கு அரசாங்கம் முன்வந்தது… இந்த முறை நாம் ஏன் ஒரு கடிதத்தை அனுப்பி சில உறுதிமொழிகளை வழங்க வேண்டும்?”
“அதனால்தான் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது; எம். பி. ஒதுக்கீடுகளைப் பெற நாங்கள் எதுவும் எழுதமாட்டோம்,” என்று அவர் கூறினார்.