இராகவன் கருப்பையா – நம் சமூகத்தைச் சேர்ந்த சில தரப்பினர் பல வேளைகளில் அர்த்தமற்ற கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பது நமக்கு விந்தையாகத்தான் உள்ளது.
இந்நாட்டில் நமக்கு எண்ணற்ற பிரச்சினைகள் இன்னும் கவனிக்கப்படாமல் கேட்பாரற்று கிடக்கிறது. எல்லாமே ‘செவிடன் காதில் ஊதிய சங்காக’ நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் இருக்கிறது.
இருந்த போதிலும் நமது உரிமைகளை பெறுவதற்கான போராட்டத்திலிருந்து நாம் துளியளவும் விலகாமல் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டேதான் இருக்க வேண்டும் என்பது நமது விதியைப்போலாகிவிட்டது.
இப்படிப்பட்ட சூழலில் சில்லறைத்தனமான கோரிக்கைகளை இடையில் திணித்து நம்மை நாமே அவமானப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை நம் சமூகம் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
“நோன்புப் பெருநாளுக்கும் சீனப்புத்தாண்டின் போதும் தலா 2 நாள்களுக்கு சாலைகளில் ‘டோல்’ கட்டணங்கள் விலக்களிக்கப்படுகின்றன, ஆனால் தீபாவளிக்கு மட்டும் அரசாங்கம் அவ்வாறு செய்வதில்லை” என கடந்த ஒரு வாரகாலமாக ‘மேகா’ பிரச்சாரம் ஒன்று கிளப்பிவிடப்பட்டுள்ளது.
இதனை ஒரு பெரிய குறைபாடாக எடுத்துக் காட்டும் ‘போஸ்த்தர்கள்’ தற்போது சமூக வலைத்தளங்களில் தீ போல பரவி வருவதைப் பார்க்க நமக்கு சற்று வேதனையாகவே உள்ளது.
முதலாவதாக, இதுதான் தற்போது நம் சமூகத்தின் தலையாய தேவையா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இதர இரு பண்டிகைகளுக்கும் இச்சலுகை கிடைத்துள்ளது என்பதற்காக நாமும் பங்கு போடுவதில் அர்த்தமில்லை.
அப்படியே தீபாவளியின் போதும் ‘டோல்’ கட்டணங்களுக்கு விலக்களிக்கப்பட்டால் எத்தனை இந்தியர்கள் அதனால் பயனடைவார்கள்? அவர்களுக்கு எவ்வளவு பணம் மிச்சமாகும்? ஒவ்வொரு பண்டிகையின் போதும் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டில் நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி ‘பாலெக் கம்போங்’ நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்?
ஆக இத்தகைய அம்சங்களை நாம் சீர் தூக்கிப் பார்த்தால் யார் பயனடைவதற்கு நம் சமூகத்தைச் சேர்ந்த சில தரப்பினர் சமூக வலைத்தளங்களில் ‘போஸ்த்தர்களை’ பரப்பி ‘டோல்’ கட்டண விலக்குக்காக பாடுபடுகின்றனர் என்று தெரியவில்லை.
பிரிதொரு சாரார் தீபாவளிக்கு 2 நாள்கள் பொது விடுமுறை வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தைப்பூச விடுமுறையோடு சேர்த்து நம் சமூகத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 2 நாள்கள் விடுமுறை கிடைப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஆக ‘டோல்’ கட்டண விலக்கு மற்றும் கூடுதல் விடுமுறை போன்றவற்றில் நாம் அங்கீகாரம் தேடுவதை விடுத்து, நம் சமூகத்திற்கு தேவையான நீண்டகால சலுகைகளை பெறுவதில் நாம் தொடர்ந்து முழு கவனம் செலுத்த வேண்டும்.
“இந்திய சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகங்களில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும், பாலஸ்தீனர்களுக்கு கொடுக்கப்படுவதைப் போல இந்திய மாணவர்களுக்கும் முழு உபகாரச் சம்பளம் வழங்கப்படும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்,” போன்ற அறிவிப்புகளை இந்த தீபாவளியின் போது இனிப்புப் செய்தியாக அறிவிப்பு செய்யுங்கள் என பிரதமருக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையிலான ‘போஸ்தர்களையோ’ காணொளிகளையோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்ந்தால் அது ஒரு விவேகமான, பயன்மிக்க கோரிக்கையாக அமையும்.
“நீங்கள் பிரதமரான பிறகு இதுதான் எங்களுக்கு முதல் தீபாவளி, எனவே இதுபோன்ற இனிப்பான அறிவிப்புகளை எங்களுக்கு தீப திருநாள் பரிசாக வழங்குங்கள்” எனும் கோரிக்கையை முன்வைத்தால் அன்வார் கோபித்துக் கொள்ளவா போகிறார்?
அதனை விடுத்து கோமாளித்தனமான சிறு சிறு கோரிக்கைகளை விடுத்து நம்மை நாமே சிறுமைபடுத்தக் கொள்ளக் கூடாது.