“ஆர்ப்பாட்டக்காரர்கள் சொல்வது தவறு, நிலம் எங்களுடையது”

கோயில் ஒன்றுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துக் கொண்டதாக பட்டர்வொர்த் குடியிருப்பாளர்களால் குற்றம் சாட்டப்பட்ட பினாங்கு இந்து அறவாரியம், சம்பந்தப்பட்ட நிலம் தனக்குச் சொந்தமானது என விளக்கமளித்துள்ளது.

பட்டர்வொர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலின் கீழ் வருகின்ற பட்டர்வொர்த் அறவாரியத்துக்குள் அந்த நிலம் இருப்பதாக இந்து அறவாரிய நிர்வாக இயக்குநர் எம் ராமச்சந்திரன் கூறினார்.

ஜாலான் மெங்குவாங்கில் உள்ள தேவான் ஸ்ரீ மகா மாரியம்மனும் ஜாலான் சிராமில் உள்ள இந்து இடுகாடும் அதே நிலையில்தான் இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

“ஆகவே நிலத்தை அபகரித்துக் கொண்டது அல்லது யாருடைய உரிமையையோ பறித்துக் கொண்டது அல்லது வாரியம் அத்துமீறிச் செயல்பட்டது அல்லது கோவில் நிலத்தை வாரியம் தனியார் மயமாக்கியது உட்பட இந்து சொத்துக்களின் அறங்காவலர், பராமரிப்பாளர் என்னும் முறையில் தனது எல்லையைத் தாண்டி செயல்பட்டது என்ற கேள்வியே எழவில்லை,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.

நேற்று ஜாலான் சிராமில் உள்ள ஸ்ரீ கெங்காதரன் சிவ பெருமான் ஆலயத்தில், பெங்காலான் வெல்ட், தாமான் பாகான் ஆகியவற்றை சேர்ந்த தனியார் வியாபாரிகளுக்கு நிலம் குத்தகை விடப்பட்டுள்ளதை ஆட்சேபித்து பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பினாங்கு அரசாங்கத்தைக் கண்டிக்கும் பதாதைகளையும் வர்த்தக நோக்கங்களுக்கு பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமி அந்த நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தாக கூறி அவரையும் கண்டிக்கும் பதாதைகளையும் ஏந்தி 30க்கும் மேற்பட்ட பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அது குறித்து ஆண்டுதோறும் மே மாதம் நிகழும் தீ மிதிப்பு உற்சவத்துக்கு அந்த நிலம் பயன்படுத்தப்படுவதால் குடியிருப்பாளர்களுடன் குறிப்பாக ஆலோசனை நடத்த இந்து அறவாரியம் தவறி விட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறிக் கொண்டனர்.

அந்த நிலத்தைப் பயன்படுத்த வேண்டாம் என தாங்கள் விடுத்த வேண்டுகோட்கள் மீது  இந்து அறவாரியத்தின் தலைவருமான ராமசாமி அகங்காரமாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டதாகக் கூறிய அவர்கள், ராமசாமி பதவி துறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால் அந்த நிலம் வாரியத்தின் கீழ் வருவதாக கூறிய ராமசாமி நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.

அந்த விவகாரம் பற்றி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தாம் பேசியதாக சொல்லப்படுவதையும் அவர்  மறுத்தார். அதனால் தாம் “நேர்மையாக” நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுக்களே எழவில்லை என்றார் அவர்.

இந்திய வியாபாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து கார் கழுவும் மையம் ஒன்றுக்கும் பழைய கார் வியாபாரி ஒருவருக்கும் அந்த நிலம் குத்தகைக்கு விடப்பட்டது என செபராங் பிராய் நகராட்சி மன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன் கூறினார்.

12 ஆணையர்களைக் கொண்ட இந்து அறவாரியம் கடந்த மாதம் அனுமதியை வழங்குவதற்கு முன்னர் அந்த விஷயத்தை விவாதித்ததாகவும் அவர் சொன்னார்.

அந்த நிலம் இந்திய வணிகர்களுக்கு மட்டுமே குத்தகைக்கு விடப்படும் என உறுதி அளித்த ராமச்சந்திரன், எந்த ஒரு பெரிய திட்டமும் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் குடியிருப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார்.

குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலத்தின் ஒரு பகுதியை முன்பு மாநில நீர் வாரியக் குத்தகையாளர்கள், கிரானைட் கற்களை குவித்து வைப்பதற்கான நிலமாக பயன்படுத்தி வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர் அந்த இடம் காடு போல் மண்டியிருந்ததாக தெரிவித்தார்.

“அந்த இடம் தீமிதி உற்சவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் எந்த வகையிலும் ஊடுருவவில்லை”, என்றும் ராமச்சந்திரன் கூறினார்.

“தாங்கள் தற்போது ஊராட்சிமன்ற, தனியார் நிலங்களில் இயங்கி வருவதால் காலியாக உள்ள அந்த நிலத்தின் சிறிய பகுதிகளை தங்களுக்கு வாடகைக்கு விடுமாறு பல இந்தியர்கள் எங்களை அணுகினர். அதனால் அவர்கள் அபராதங்கள், வெளியேற்றப்படுவது போன்ற பல பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டியிருக்காது.”

“சொத்து அபகரிக்கப்படவில்லை”

ஊடகங்களில் வெளியானதைப் போன்று கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை இந்து அறவாரியம் ஒரு போதும் அபகரித்துக் கொண்டதில்லை என்றும் ராமச்சந்திரன் வகியுறுத்தினார்.

புகார்தாரர்கள் தங்களது கூற்றுக்களுக்கு தேவையான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் கெ ஜெகன்னாதனை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவல்களையும் அவர் நிராகரித்தார்.

இந்து உற்சவங்கள் ஆண்டுதோறும் நிகழ்வதற்கு எஞ்சியுள்ள ஒரு சில இடங்களில் அதுவும் ஒன்று என்பதால் அதனை எடுத்துக் கொள்ள வேண்டாம் என வாரியத்தை ஜெகன்னாதன் கேட்டுக் கொண்டதாக அந்தத் தகவல்கள் குறிப்பிட்டன.

ஸ்ரீ கெங்காதரன் சிவ பெருமான் ஆலயத்தின் குழு உறுப்பினர்கள் உட்பட எந்த கோயில் குழு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படுவதையும் ராமச்சந்திரன் நிராகரித்தார்.

ஒரு வாரத்துக்குள் “நில அபகரிப்பு” விவகாரம் எனக் கூறப்படுகின்ற அந்த விவகாரம் தீர்க்கப்படா விட்டால் அந்தப் பிரச்னையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அல்லது நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்லப் போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

அதற்குப் பதில் அளித்த ராமச்சந்திரன், எம்ஏசிசி அல்லது நீதிமன்றங்களுக்கு பிரச்னைகளைக் கொண்டு செல்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு எனவும் “எங்களுக்கு அதில் எந்தப் பிரச்னையும் இல்லை”, எனவும் தெரிவித்தார்.