மின்சாரத் தாக்குதலுக்கு ஆளான சிறுவனின் மருத்துவ செலவை TNB ஏற்கும்

Tenaga Nasional Bhd (TNB) வியாழன் (நவம்பர் 16) பினாங்கில் உள்ள ஸ்ரீ பாயு, பயான் லெபாஸில் உள்ள துணை மின்நிலையத்தில் மின்சாரம் தாக்கிய சிறுவனின் சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகள் உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கும்.

TNB இச்சம்பவம் குறித்து அனுதாபம் தெரிவித்ததுடன், 12 வயது சிறுவனுக்குச் சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதாகக் கூறியது, அதன் நிர்வாகப் பிரதிநிதி நேற்று பினாங்கு பொது மருத்துவமனையில் சிறுவனின் பெற்றோரைச் சந்தித்தார்.

“தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில், தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்”.

“பினாங்கு TNB மண்டல அசெட் தலைவர் இர் அனன் ஈயம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அவர்களின் சுமையைக் குறைக்க உடனடி முன்கூட்டிய உதவிகளை வழங்கினார்,” என்று TNB இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவுவதற்காகக் காவல்துறை மற்றும் எரிசக்தி ஆணையத்துடன் TNB ஒத்துழைத்தது, மேலும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டுக் கொள்கையின்படி TNB ஒரு உள்ளக விசாரணைக் குழுவையும் நிறுவியுள்ளது.

நேற்று, 12 வயதான முகமட் டேவிசி ஜரீஃப் முகமட் கைரி மின்சாரம் தாக்கியதில் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானதாக ஊடகங்கள் தெரிவித்தன.