சிலுவையுடன் கூடிய நெக்லஸ் அணிந்ததற்காக ஊழியரைப் பணிநீக்கம் செய்த உணவக நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று மாலை நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில், குலசேகரன் (பக்காத்தான் ஹராப்பான்-இப்போ பராத்) பணியிடத்தில் மதப் பாகுபாடுகளைக் குறிப்பாகக் கையாளும் சட்டங்கள் நாட்டில் உள்ளன என்றார்.
“சமீபத்தில், மத அடையாளமான சிலுவையுடன் கூடிய நெக்லஸை அணிந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டார்”.
“அரசு இதுகுறித்து ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? ஏனெனில், அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட விதி உள்ளது”.
“அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்கள் அதை விரைவில் செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
டிஏபி எம்பி மனிதவள அமைச்சகம் தொடர்பாகக் குழுநிலையில் பட்ஜெட் 2024 மசோதாவை விவாதித்துக் கொண்டிருந்தார்.
மோசமாகும் முன் செயல்படுங்கள்
மேலும், குலசேகரன் நாடாளுமன்றத்தில், அரசாங்கம் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தவறினால், மலேசியாவில் இத்தகைய பாகுபாடு பரவும் என்று தனது கவலையைத் தெரிவித்தார்.
“இனம் மற்றும் மதம் பெரிய பிரச்சனைகள். ஒரு நாள் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்கள் நெற்றியில் திருநீறு பூசுவதைப் பிரச்சனை செய்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன்”.
“அது மட்டுமல்ல. ஒரு நாள் தொழிலாளர்கள் தங்கள் கலாச்சார உடையான சேலையை அணியக் கூட அனுமதிக்கப்பட மாட்டார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சிலுவை அணிந்த நபரைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, மோன் சைனீஸ் பீஃப் ரொட்டி உணவகம் அதன் ஊழியரைப் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.