ஹமாஸ்-இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டனர்

ஹமாஸ்-இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற உடன்பாட்டின் ஒரு பகுதியாக ரமல்லாவின் மேற்கில் உள்ள இஸ்ரேலிய போர் சிறையிலிருந்து 39 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்று அனடோலு ஏஜென்சி(Anadolu Agency) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலும் ஹமாஸும் அக்டோபர் 7ம் தேதி மோதல் தொடங்கியதிலிருந்து முதல் கைதிகள் பரிமாற்றத்தை நேற்று நடத்தினர்.

இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தத்தின்படி, கைதிகள் நான்கு நாட்களில் அணிகளாக விடுதலை செய்யப்படுவார்கள்.

கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், முதல் கட்டமாக இஸ்ரேல் சிறைகளிலிருந்து 39 பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்காக 24 இஸ்ரேலியர்களையும் வெளிநாட்டவர்களையும் ஹமாஸ் விடுவித்தது.

“மனிதாபிமான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ICRC (சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்) 24 குடிமக்களைப் பெற்றுள்ளது, இதில் ஏராளமான பொதுமக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்,” என்று கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி X இல் தெரிவித்தார். ICRC ஒரு அறிக்கையில், “24 பணயக்கைதிகள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதை உறுதி செய்வதில் நாங்கள் நிம்மதியடைந்துள்ளோம்,” என்று கூறியது.

“காஸாவிலிருந்து ரஃபா எல்லைப் பகுதிக்கு அவர்களை அழைத்துச் செல்வதன் மூலம் இந்த விடுதலையை நாங்கள் எளிதாக்கி இருக்கிறோம். இரு தரப்பினருக்கும் இடையே நடுநிலையாக நமது பங்கு உண்மையான தாக்கத்தை இது காட்டுகிறது”.

“வாரக்கணக்கான துயரங்கள் நீடித்தபிறகு, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவது பெரும் நிம்மதியை அளிக்கிறது”.

இதற்கிடையில், தாய்லாந்து பிரஜைகள் 12 பேரும் ஹமாஸால் விடுவிக்கப்பட்டதை தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் உறுதிப்படுத்தினார்.

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 14,854 ஆக உயர்ந்துள்ளதாக முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள அரசாங்க ஊடக அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 6,150 குழந்தைகள் மற்றும் 4,000 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர், 36,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

உத்தியோகபூர்வ இஸ்ரேலிய இறப்பு எண்ணிக்கை 1,200 ஆக உள்ளது.