30 ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிக்கு இடையறாத ஆதரவு வழங்கும் சீன வணிகர்

பேராக் மாநிலம் சிதியவான் பகுதியைச் சேர்ந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த ரப்பர் வியாபாரி ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக இங்குள்ள ஒரு தமிழ்ப் பள்ளிக்கு ஆதரவளித்து வருகிறார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு னர் யெக் டோங் பிங் (Yek Dong Ping) ரிம 330,000 க்கு ஆயர் தவாரில் ஒரு விவசாய நிலத்தை வாங்கியபோது  SJKT Ladang Ayer Tawar என்ற அந்த பள்ளி ஏற்கனவே அந்த நிலத்தில் இயங்கி வந்தது.

யெக், அரை ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்த பள்ளிக்கான வாடகையைத் தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், பள்ளிக்கான அரசு வரியையும் அவரே செலுத்தினார் என்று MySinchew தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, பள்ளியின் பிரதிநிதிகள் நிலத்தை விரிவாக்கம் மற்றும் சீரமைப்புக்காக அவரை அணுகினர்.

ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் RM200,000 இருந்தபோதிலும், மூன்று ஏக்கரை RM400,000க்கு விற்க யெக் ஒப்புக்கொண்டார். பள்ளி நிர்வாகத்திடம் நிதி போதுமானதாக இல்லை, ஆனால், நிதி திரட்டி, அரசு ஒதுக்கீட்டையும் கேட்போம் என்றார் யெக்.

“பள்ளிக்கு நிதி கிடைத்ததால், RM50,000 நன்கொடை அளிக்க என் விருப்பத்தை தெரிவித்தேன். அதனால் நிலத்தின் விலை RM350,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

“ஒரு வருடம் கழித்து, RM350,000 திரட்ட முடியாததால் பள்ளிப் பிரதிநிதிகள் மீண்டும் என்னை நன்கொடைக்காக அணுகினர்,” என்று சீன நாளிதழிடம் யெக் கூறினார்.

யெக்-கின் கருணைக்கு பாராட்டுக்கள்

இந்த நேரத்தில், யெக் தாராளமாக மற்றொரு RM50,000 நன்கொடை அளித்தார், இது நிலத்தின் விலை RM300,000 ஆக குறைத்தது.

1938 இல் நிறுவப்பட்ட இந்தப்பள்ளியின் இரண்டு துணைத் தலைமையாசிரியர்கள், யெக்கின் பெருந்தன்மை மற்றும் கருணையைப் பாராட்டுவதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்கள்.

அவர்களின் கூற்றுப்படி, கடந்த 30 ஆண்டுகளில் ஒரு காசு கூட வாடகை வசூலிக்கவில்லை மற்றும் பள்ளிக்கான வாடகையை செலுத்தாத நிலையிலும்,  யெக் ஒவ்வொரு சீன புத்தாண்டிலும் பள்ளிக்கு மாண்டரின் ஆரஞ்சுகளை வழங்குகிறார் மற்றும் பள்ளி நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்கிறார் என்றார்கள்.

“நான் பணக்காரன் அல்ல, ஆனால் நிலவரியை  என்னால் இன்னும் செலுத்த முடியும்,” என்று யெக்  MySinchew-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இத்தனை ஆண்டுகளாக தனக்கு ஆதரவாக இருந்த இந்திய ரப்பர் தொழிலாளர்களுக்கு கைமாறாக நான் “திரும்பக் கொடுப்பதற்கு”, இது ஒரு வழியாகும் என்கிறார்.