சக ஊழியர்களால் கரைபடிந்த சிவகுமாரின் அமைச்சர் பதவி

 பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடந்த புதன்கிழமையன்று செய்த அமைச்சரவை மாற்றத்தில் மனிதவள அமைச்சர் பொறுப்பிலிருந்து சிவகுமார் விலக்கப்பட்டார். அது பற்றிய விமர்சனம் குறித்து தனது கருத்தை பதிவு செய்கிறார் இராகவன்( -ஆர்)   

இராகவன் கருப்பையா – கடந்த ஒரு ஆண்டு காலமாக நாட்டின் மனிதவள மேம்பாட்டை முன்னிறுத்தி அவர் தொடங்கிய பல்வேறு திட்டங்கள் நிறைவு பெற வாய்ப்பில்லாமல் நிலுவையில் உள்ளதால் தற்போது அவை முற்றாக ரத்தாகும் சூழலை எதிர்நோக்கியுள்ளது மிகவும் வருத்தமான ஒன்று.

குறிப்பாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம், மலேசிய இந்திய உலோக மறுசழற்சி உரிமையாளர்கள், மலேசிய இந்திய முடி திருத்தும் நிலைய உரிமையாளர்கள், மலேசிய இந்திய ஜவுளிக்கடை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மலேசிய இந்திய நகைக்கடை உரிமையாளர்கள் போன்ற தரப்பினர் ஊழியர் பற்றாக்குறையினால் அவதிப்படுகின்றனர்.

காலங்காலமாக இருந்து வரும் இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் சுமூகமான தீர்வு காண்பதற்கு பல்வேறு திட்டங்களை சிவகுமார் வகுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அநேகமாக அவர் செய்த ஒரே தவறு தமது அலுவலகத்தில் பணிபுரிவதற்கு சரியான ஊழியர்களை தேர்வு செய்யாதது அல்லது அவர்களை அணுக்கமாக கண்காணிக்கத் தவறியதுதான்.

அமைச்சர் பொறுப்பேற்று நான்கே மாதங்களில் அவருடைய அலுவலகத்தைச் சேர்ந்த சில ஊழியர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது சிவகுமாரின் நற்பெயருக்கு பெரும் கலங்கத்தை ஏற்படுத்திவிட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்ததிலிருந்து 22 மாதங்களுக்கு ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான ஜ.செ.க.வின் குலசேகரன் அப்பொறுப்பை வகித்தார்.

பிறகு கொல்லைப் புறமாக நுழைந்து ஆட்சியமைத்த முஹிடின் அரசாங்கத்திலும் அதனைத் தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக நுழைந்த  சப்ரி அரசாங்கத்திலும் மொத்தம் 31 மாதங்களுக்கு ம.இ.கா. துணைத்தலைவர் சரவணன் அதன் அமைச்சராக இருந்தார்.

இவ்விருவரும் கூட தங்களுடைய அனுபவத்தை சிவகுமாருடன் பகிர்ந்து அவருக்கு உதவியாக இருந்ததாகத் தெரியவில்லை. குறைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. குறிப்பாக அவருடைய செயல்பாடுகள் மீது குலசேகரன் அடிக்கடி குறை கண்டுபிடித்தார்.

அந்த அமைச்சின் திட்டங்களில் பலவற்றை மற்ற பல அமைச்சுகளின் ஒத்துழைப்பின்றி அமுலாக்கம் செய்ய இயலாது. இதனை சிவகுமாரே பல தடவை விவரித்துள்ளார். உதாரணத்திற்கு அயல் நாட்டுத் தொழிலாளர்களை வரவழைப்பதில் உள்துறை அமைச்சும் வெளியுறவு அமைச்சும் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது.

எனினும் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து இந்த குறுகிய காலத்தில் மனிதவள அமைச்சின் மேம்பாட்டுக்கு சிவகுமார் போட்ட உழைப்பு அளப்பரியது என்ற போதிலும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சக ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அவருக்கு இழுக்கை ஏற்படுத்திவிட்டது.

தமது ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்று சிவகுமார் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் நெருக்குதல் கொடுத்த போதிலும் அதற்கான அவசியம் இல்லை என அப்போதே அன்வார் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டவர்களை சம்பவம் நடந்து ஒரு சில வாரங்களிலேயே சிவகுமார் வேலை நீக்கம் செய்துவிட்டார். இன்று வரையிலும் அவர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறந்த சேவையாளரான கிள்ளான்  தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவிற்கு கடந்த பொதுத் தேர்தலில் எவ்வித காரணமும் கொடுக்கப்படாமல் தொகுதி மறுக்கப்பட்டது நமக்குத் தெரியும். அதற்கு இனவாதம் கலந்த உள்கட்சி அரசியல் ஒரு காரணம் என பிறகு பேசப்பட்டது.

அதே நிலைதான் இப்போது சிவகுமாருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும். ஏனெனில் அமைச்சரவை மாற்றத்தை அன்வார் தன்னிச்சையாக செய்திருக்க வாய்ப்பில்லை. அந்தந்த கட்சித் தலைவர்களின் சிபாரிசின் பேரிலேயே அன்வார் இம்மாற்றங்களை செய்திருப்பார்.

எனவே சந்தியாகோவைப் போல சிவகுமாரும் உள்கட்சி அரசியலால் வஞ்சிக்கப்பட்டுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.